மனைவியின் கள்ளக்காதலால் பறிபோன கணவர் உயிர்: கொலை வழக்கில் திடுக் திருப்பம்!

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கு அவரது மனைவியின் கள்ளக்காதலே காரணம் என தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். 35 வயதான இவர் சொந்தமாக சாயப்பட்டறை நடத்தி வந்தார்.

இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாயப்பட்டறையில் ஆனந்தன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கார்த்திகேயன் என்ற 33 வயது மதிக்கத்தக்க நபர், பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் முன்பு தான்தான் சாயப்பட்டறை உரிமையாளர் ஆனந்தனை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.

இதையடுத்து கார்த்திகேயனை பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

அதாவது, கார்த்திகேயனின் சொந்த ஊர் வெண்ணந்தூர். கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிபாளையத்தில் தங்கி சென்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

ஆனந்தன் வீட்டுக்கு அருகில் சென்டரிங் வேலை செய்த போது அவருடைய மனைவி ஜெயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகேயன் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சாயப்பட்டறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் ஆனந்தனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஒரு நாள் ஜெயலட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்த போது, தனது கணவருக்கு கள்ளக்காதல் தெரிந்துவிட்டதாக கூறி மறுத்துள்ளார். மேலும் தனது கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் ஆனந்தனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு சாயப்பட்டறையில் தனியாக படுத்திருந்த ஆனந்தன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

மனைவியின் கள்ளக்காதலால் அப்பாவி கணவரின் உயிர் பரிதாபமாக பரிபோயுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.