‘அவனுக்கு விதித்த விதி அவ்வளவுதான்’ – ரஷ்யாவில் மகனை இழந்த தந்தை கண்ணீர்

காரைக்குடியிலிருந்து ரஷ்யாவுக்கு மருத்துவ படிப்பு படிக்கச் சென்ற மாணவர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விரைவில் இறந்துபோன மாணவர்களின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை அருகில் குடியிருந்து வரும் செல்வகுமார் தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். லதா, காரைக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதியரின் மகன் நவீன் கிறிஸ்டோபர். இவர் இந்தக் கல்வி ஆண்டில் ரஷ்யாவில் உள்ள க்ரேமியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ படிப்பில் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் இவர் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள கடலில் குளிக்கச் சென்றபோது  கடலில் மூழ்கி இறந்து போனார்.

இதுகுறித்து நவீன் கிறிஸ்டோபரின் தந்தை செல்வகுமார் பேசும்போது,  ‘எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். இவன் அங்கு படிக்கும் தைரியத்தில் இளையவனை அங்கு அனுப்பி வைத்தேன். என் இரண்டு பிள்ளைகளுமே நன்றாகப் படிக்கக்கூடியவர்கள். இவர்களுக்கு கல்வி பாடத்தோடு  வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்ததால் ரொம்பவே குடும்ப பொறுப்பாக இருப்பார்கள். தீபாவளி முடிந்த பிறகுதான்  கிறிஸ்டோபர் ரஷ்யா சென்றான்.

சென்னையைச் சேர்ந்த மாணவன் ஜெய்வந்த், நவீன் கிறிஸ்டோபர், இன்னொரு மாணவர் என மூன்று பேரும் அங்குள்ள கடலில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள். சென்னைக்கார பையன் கடல் சுழியில் சிக்கியதும் அவனைக் காப்பாற்ற என்மகன் போயிருக்கிறான் .இவனையும் சுழி உள்ளே இழுத்துவிட்டது. கரையில் இருந்த மாணவர் சத்தம் போட்டு அலறியிருக்கிறான். உடனே மீட்புப் பணியினர் வந்து என் மகனின் உடலை எடுத்துவிட்டனர். இரண்டு மணிநேரம் கழித்தே ஜெய்வந்த் உடலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து அங்குள்ள மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துபோனான் என் மகன். இறைவன் அவனுக்கு விதித்த விதி அவ்வளவுதான் என்று நினைத்து என் மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும்போது அவரையும் அறியாமல் அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.