அரசியல் சதுரங்கத்தின் அடுத்த நகர்வு….

சமகால அரசியல் பல குழப்பங்களையும், சலனங்களையும் அடைந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டிகளே.

தற்போதைய நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிற்பார் என்றே அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேள்விகளுக்கு மத்தியில் “கோட்டாபய ராஜபக்ஷவே ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது” என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சி அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதே வகைக் கருத்தினை மஹிந்த ஆதரவாளர்கள் பலரும் கூறிவருவதன் காரணமாக கோட்டாபய அடுத்த தேர்தல் களத்தில் குதிப்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது என்றே தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது. அவ்வகையில் பிரதமரும் போட்டிக்களத்தில் உள்வாங்கப்படலாம்.

ஜனாதிபதி மைத்திரிபாலவும் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார். இவ்வாறாக தற்போதைய சூடுபிடிக்கும் அரசியலில் எதிரும் புதிருமான மூன்று முக்கியஸ்தர்கள் அதிகார போட்டியில் உள்ளார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க “இலங்கைக்கான இலங்கையர்கள் – ஒரு பிரகாசமான எதிர்காலம்” என்ற அமைப்பின் பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற வாக்களிப்பு கருத்துக் கணிப்பு முறை ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

அதில், கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, நாகநந்த கொடிதுவக்கு (சட்டத்தரணி) ஆகியோரில் யாருக்கு அதிக செல்வாக்கு என்ற வகையில் சமூக வலைத்தள கருத்துக் கணிப்பு இடம்பெற்று வருகின்றது.

அதில் கோட்டாபயவிற்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளும், சஜித் பிரேமதாசவிற்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளும், ரணில் மற்றும் நாகநந்த கொடிதுவக்கு ஆகியோருக்கு ஆயிரத்திற்கு குறைவான வாக்குகளும் இறுதியாக மைத்திரிக்கு மிகக் குறைவாக நூற்றுக்கணக்கான வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு கோட்டாபயவை அடுத்த ஜனாதிபதியாக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்படுவதாக கொழும்பு ஊடகங்கள் சில கருத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக கொண்டுவருவதே அவர் ஆதரவுத் தரப்பினரின் திட்டமாகக் காணப்படுகின்றது.

தற்போது பிரதமருக்கு எதிரான சலனங்களும் இதன் காரணமாகவே ஏற்படுத்தப்படுகின்றது என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.