சர்வதேச ரீதியில் இந்தியாவை பின்தள்ளிய இலங்கை!

ஊடகவியலாளர்களுக்கான ஜனநாயகம் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை 131வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச நாடுகளை மையப்படுத்தி இந்த அமைப்பினால் ஊடக சுதந்திரம் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. 2017ஆம் ஆண்டு இலங்கை 141வது இடத்தைப் பிடித்திருந்தது.

எனினும், இம்முறை இலங்கை பத்து இடங்கள் முன்னேறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றும் அவற்றுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவர முனைந்துள்ளமையே இதற்கு காரணம் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உலகில் ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்ட நாடாக நோர்வே திகழ்வதுடன், சுவீடன், சுவிஸர்லாந்து ஆகியன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 138வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.