யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபையில் எமது கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த அநீதிக்குப் பழிக்கு பழி வாங்கும் செயற்பாடாகவே வவுனியா நகர சபையில் நடந்ததைப் பார்க்கின்றோம் என்று ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வவுனியா நகர சபையை, கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது. கூட்டணி நிறுத்திய தவிசாளர் வேட்பாளரை ஈ.பி.டி.பி. ஆதரித்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
‘நகர சபையை முன்னர் ஆட்சி செய்த கூட்டமைப்புச் சரியாகச் செயற்படவில்லை. யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நெடுந்தீவுப் பிரதேச சபையில் எமது கட்சிக்கு அநீதி இழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்கும் செயற்பாடாகத்தான் இதனைப் பார்கின்றோம்’- என்று அவர் கூறினார்.
நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப் பெற்றிருந்தபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.