பாரியதொரு புற்றுநோயாக மதமாற்றம்!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மதமாற்றம் என்பது பாரியதொரு புற்றுநோயாக உருவெடுத்துள்ளதாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

சிவநெறி அறப்பணி மன்றத்தின் நான்காம் ஆண்டு நிறைவும், அறக்கொடை விழாவும் நேற்று கல்முனையில் உள்ள நால்வர் கோட்ட கேட்போர் கூடத்தில் சிவநெறி அறப்பணி மன்ற தலைவர் சைவவித்தகர் யோ.கஜேந்திரா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வறுமை என்பது ஒரு கொடிய நோயாகவே இருந்து வருகின்றது. அதன்காரணமாக குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டு கல்வியினை தொடர்ந்து கற்க முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.

அவ்வாறான குடும்பங்களை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கும், பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டிற்கும் புலம்பெயர் அமைப்புக்கள் பல உதவிகளை செய்து வருகின்றன.

அந்த உதவிகளை பெற்று தங்களது குடும்பங்களை உயர் நிலைக்கு கொண்டுவர பாடுபட வேண்டியது இங்குள்ள அனைவரதும் கட்டாய கடமையாகும்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தவரையில் மதமாற்றம் என்பது கொடிய புற்று நோய் போன்று பீடித்து நிற்கின்றது.

இதற்கு முழுமையான காரணம் அவர்களிடத்தே உள்ள வறுமை நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.