கூட்டமைப்பின் அழுத்தம் தொடரும்! – சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மகாவலி அதிகாரசபையின் அமைச்சராக உள்ள ஜனாதிபதி மேற்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருந்த மகாவலி அதிகாரசபையின் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.