தமிழகத்தில் அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சின்னத்திரை தொகுப்பாளினி புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் ரொபினா. சின்னத்திரை தொகுப்பாளரும், ரேடியோ வர்ணனையாளருமான இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா, அவரது மகன் நாசர் அலி உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், அதிமுக எம்.பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை கடந்த 2015-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன். முதலில் நண்பர்களாக இருந்த நாங்கள் நாளைடைவில் காதலர்களாக மாறினோம்.
அவர் பேச்சில் மயங்கிய நான் அவருடன் மனைவி போல் வாழ்ந்தேன். ஒருநாள் என்னை மதம் மாற வேண்டும் எனவும், அப்போது தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
அவரது பேச்சால் நான் மதமும் மாறினேன். பின்னர் நாங்கள் இருவரும் வடபழனில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்தோம்.
அங்கு கணவன்-மனைவியை போன்றே வாழ்ந்தோம். அங்கிருந்த அக்கம்பக்கத்தினரும் எங்களை தம்பதிகள் என்றே எண்ணினர்
அப்போது நாசர் அலிக்கு திரைப்படத்தில் நடிப்பதற்காக 50 லட்சம் ரூபாய் பணமும், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் கொடுத்தேன்.
அதை கொடுத்த பின்பு என்னை விட்டு சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் தம்மிடம் இருந்து விலகிய நாசர் அலிக்கு வரும் 25-ஆம் திகதி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக அறிந்தேன்.
இது குறித்து நான் அவரிடம் எனது பணம், நகையை திருப்பிக் கொடுக்குமாறும், எனது வாழ்வை சீரழித்தது தொடர்பாகவும் கேட்டேன்.
ஆனால் அவரது தந்தை எம்பி அன்வர்ராஜா மற்றும் அவரின் உதவியாளர் தேவா ஆகியோர் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாதகவும் துன்புறுத்தியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்.
இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாசர் அலிக்கு நடைபெறவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தி என்னுடைய வாழ்வுக்கு எதாவது வழி செய்யும் படி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.