கோடைக்காலம் வந்துவிட்டாலே ஏகப்பட்ட பிரச்னைகள் தலைதூக்கும். அதில் ஒன்று, வெயிலில் அலைவதால் கறுத்துப்போகும் முகம் பற்றியது. என்னதான் சன்ஸ்க்ரீன் லோஷன், பவுடர்கள் என்று போட்டுக்கொண்டாலும், இந்தக் கடுமையான கோடையில் முகம் கறுத்துப்போவதைத் தவிர்க்கவே முடியவில்லை. அந்தக் காலத்தில் மட்டும் பெண்கள் அப்படியே இருந்தார்களே என்ற ஆச்சர்யத்துக்கு பதில் ஒன்றே ஒன்றுதான். அவர்கள், செயற்கையாக எதையும் பயன்படுத்தவில்லை. வெறும் மஞ்சள், சந்தனம், கடலைமாவு போன்றவை தான் அவர்களின் அழகுக்குக் காரணமாக அமைந்தது. சரி, இந்த வெயிலுக்கு எப்படி முகத்தைப் பாதுகாப்பது என்று காண்போம்..
தூய சந்தனம் மற்றும் மஞ்சள் கலந்த கலவை, உங்கள் சருமத்தை வெகுவாகப் பாதுகாத்து மின்னச்செய்யும். பன்னீர் கலந்த ரோஜா மலர்களின் கூழ், உங்கள் முகத்தை சில்லென புதிதாக மாற்றும். பால்பவுடர், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்த கலவை முகத்துக்கு மினுமினுப்பை அளிக்கும். பச்சை உருளைக்கிழங்கின் துண்டுகள், வெள்ளரித்துண்டுகளை முகத்தில் வைத்துக்கொண்டால், நல்ல நிறத்தை அளிக்கும்.
ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர் சேர்ந்த பேக், முகத்தைப் பொலிவாக்கும். துளசி அல்லது புதினா பேஸ்ட்டை முகத்தில் தடவ, கறுமையை நீக்கி சருமத்தை அழகாக்கும். கெட்டியான பாலில் குங்குமப்பூ கலந்து தடவ, முகம் வெண்மையாகும். மஞ்சள் மற்றும் தக்காளி பேஸ்ட், முகத்தை வழவழப்பாக்கும். கடலை மாவு, பால் அல்லது கடலை மாவு பன்னீர் கலவை உங்கள் முகத்தின் மாசுக்களை நீக்கி புதிய பொலிவைத்தரும். வாழை, பப்பாளி பழங்களின் கூழும் முகத்துக்கு அழகைக் கொடுக்கும். பாதாம் எண்ணெய் மசாஜ் முகத்துக்கு நல்லது. இவற்றைத் தவிர, வெயில் காலங்களில் நான்கு முறை குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் போதும். எப்போதும் பளிச்சென்று இருக்கும்.