சம்பளத்தை கேட்டதால் கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்

சம்பளப் பிரச்னை மோதலாக வெடிக்க, சக தொழிலாளியின் கழுத்தை மற்றொரு தொழிலாளி அறுத்த சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் போலீஸ் பூத் அருகேயே நடக்க, டியூட்டியில் போலீஸார் இல்லாதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பிரபல ஹோட்டலில், சேலத்தைச் சேர்ந்த மாஸ்டர் மற்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், பணிமுடிந்து சொந்த ஊரான சேலம் செல்வதற்காக கரூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது, கரூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள போலீஸ் பூத் அருகே, சம்பளத்தைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக யுவராஜ் என்பவருக்கும், சக தொழிலாளிக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. யுவராஜிடம் சக தொழிலாளி, ”எனக்கு கம்மியாக சம்பளம் கொடுத்துவிட்டு, நீ அதிகம் எடுத்திருக்கிறாய். மரியாதையா எனக்குரிய சம்பளத்தை தா. இல்லைனா நடக்குறதே வேற” என்று சத்தம் போட்டு கேட்டிருக்கிறார். அதற்கு யுவராஜ், ”அதெல்லாம் தர முடியாது. இந்த அதட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்க” என்று சொல்லியிருக்கிறார்.

போலீஸ் பூத்

இதனால் ஆத்திரமடைந்த சக தொழிலாளி யுவராஜை தாக்கத் தொடங்கியிருக்கிறார். யுவராஜை விடாமல் தாக்கிய தொழிலாளி, தன் கையில் இருந்த பிளேடால் யுவராஜின் கழுத்தை அறுத்ததால், ரத்தம் சொட்டச் சொட்ட கீழே சரிந்தார் யுவராஜ். அவரை பிளேடால் கிழித்த தொழிலாளி முழு போதையில் இருந்துள்ளார். அதனால் கோபம் தலைக்கேற, நிதானம் தவறி இப்படி அறுத்திருக்கிறார். மயக்கமடைந்த யுவராஜை சக தொழிலாளிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட கரூர் காவல்நிலைய போலீஸார், தப்பியோட முயன்ற தொழிலாளியைப் பிடித்து, விசாரித்துவருகின்றனர். கரூர் பேருந்துநிலையம் அருகே ஹோட்டல் தொழிலாளியின் கழுத்தை சக தொழிலாளியே அறுத்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, காவல் பூத் அருகேயே இந்தச் சம்பவம் நடந்ததோடு, போலீஸார் டியூட்டியில் இல்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.