கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண்!

பிரித்தானியாவில் இளம்பெண்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை அவரது பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் நாட்டிங்காம் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா சென்டரின் அருகாமையில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அந்த வழியாக நடந்து சென்ற மரியாம் முஸ்டாபா(18) என்ற இளம்பெண்ணை திடீரென்று 2 பெண்கள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் கடுமையாக பதிக்கப்பட்ட அவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க எண் 7 பேருந்தில் ஏறியுள்ளார். மட்டுமின்றி அந்த பேருந்தின் ஓட்டுநரிடம், குறித்த இரு பெண்களையும் பேருந்தில் அனுமதிக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.

ஆனால் அதை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிய ஓட்டுநர் குறித்த பெண்களையும் பேருந்தில் அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் பேருந்தின் முகப்பில் மறைந்திருந்த மரியாமை தேடிச் சென்ற அந்த இரு பெண்களும் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் மரியாம் சுயநினைவை இழந்து சரிந்துள்ளார். இந்த நிலையில் உதவிக்கு வந்த பேருந்து ஓட்டுநர் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து மரியாம் முஸ்தபாவை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர் மருத்துவமனையில் குற்றுயிராக கிடக்கும் தங்கள் மகளை கண்டு கதறியுள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் முதலுதவி அளித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை விடுவித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் அவரை எழுப்பச் சென்ற சகோதரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மரியாம் மீண்டும் சுயநினைவை இழந்து செயலற்று படுக்கையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அங்கே அவர் 12 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மரியாம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை பொலிசாருக்கு தகவல் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொலிசாரின் மெத்தனமே மரியாம் மறைவுக்கு காரணம் எனவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.