கிவி பழம் பார்ப்பதற்கு சாப்பிட தோன்றாது. அதேப் போல் இது அனைவருக்குமே பிடிக்கும் பழமாகவும் இருக்காது. ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டால் நாம் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம்.
உங்களுக்கு கிவி பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
புற்றுநோய்
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுக்கும் போது, குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
ஆஸ்துமா
கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். ஆய்வுகளில் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
கிவி பழத்தை ஒருவர் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், மூச்சு இறைப்பு பிரச்சனை வரும் அபாயம் குறையும்.
இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.
போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் இச்சத்து பிறப்பு குறைபாட்டைத் தடுக்கும்.
இதனால் தான் கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.
இதயத்திற்கு நல்லது
கிவி பழத்தை ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைக் குறைத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
சிலர் இரத்தம் உறைவதைத் தடுக்க மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள்.ஆனால் கிவி பழத்தை சாப்பிட்டால், இயற்கையாகவே இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
இரத்தத்திற்கு நல்லது
கிவி பழம் இரத்தத்தை மெலிதாக்கி, உடல் முழுவதும் சிறப்பாக ஓடச் செய்யும்.
மேலும் கிவி பழத்தை சாப்பிட்டால், உடலால் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயம் தடுக்கப்படும்.
ஏனெனில் இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.
எடை குறைவு
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறப்பான பழம். ஏனெனில் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு.
மேலும் இது மற்ற பழங்களைப் போல் உடலில் இன்சுவின் உற்பத்தியை அதிகரிக்காது.
மேலும் இதில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். முக்கியமாக இப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு.