கமலிடம் சுயமரியாதை இழந்தேன், வருமானத்தை இழந்தேன் – கௌதமி

கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து 10 ஆண்டுகளாக வாழ்ந்த கவுதமியுடன் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை நடிகை கவுதமி மறுத்துள்ளார்.

இது சம்பந்தமாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.

கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நான் எனது வாழ்க்கையை கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்து வருகிறேன். நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

இப்போது எங்களுக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். எனது குழந்தைக்கு பொருளாதார ரீதியாக ஒரு வலுவான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேவையான பணிகளை செய்து வருகிறேன்.

மேலும் வலைதளத்தில் ஒரு கடிதம் ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நான் திரை தொடர்பான பல்வேறு பணிகளை செய்தேன். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். கமல் நடித்த விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார நிபுணர் பணியை செய்தேன்.

ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை. நான் கேமராவுக்கு முன்பும், பின்பு இருந்தும் பல பணிகளை செய்துள்ளேன். அதற்கான பணமும் வரவில்லை.

இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை.

இதுபோன்ற பணிகள் மூலம்தான் எனக்கு வருமானம் வருகிறது. அதை வைத்துதான் நான் வாழ்க்கையை உருவாக்க வேண்டும். ஆனால், சம்பள பாக்கி தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நானும், கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்‌ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது.

இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலும், சுய மரியாதையை இழக்க கூடாது என்பதாலும் நான் பிரிந்து வந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.