கையடக்கத் தொலைபேசி மின்னேற்றப்பட்டுக் கொண் டிருக்க அதில் இணைக்கப்பட்ட ஹெட்போன் (தலையில் அணியப்படும் ஒலிவாங்கி உபகரணம்) மூலம் பாடலை செவிமடுத்துக் கொண்டிருந்த 17 வயது யுவதியொருவர், ஹெட்போன் காதுப் பகுதியில் உருகி மின்சாரம் கசிந்ததால் மின்சாரத்தால் தாக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
றியசோ பிறியோ நகரைச் சேர்ந்த லூஸியா படின்ஹெரோ என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கையடக்கத்தொலைபேசி தொடர்ந்து மின்னேற்றப்பட்டுக் கொண்டிருக்க அந்தத் தொலைபேசியும் ஹெட்போனின் காதில் இணைக்கப்படும் பகுதியும் உருகிய நிலையில் யுவதி உணர்விழந்து காணப்பட்டதாக அவரது பாட்டி கூறினார்.இதனையடுத்து அந்த யுவதியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி யுவதி மின்சாரத்தால் தாக்குண்ட போது இடி மின்னலுடன் கூடிய காலநிலை எதுவும் நிலவவில்லை எனவும் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.