ரணிலை வெளியேற்றுவதில் விடாப்பிடி – நிமாலை பிரதமராக்க முயற்சி!

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், சிறிலங்கா அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்தவும், மகிந்த அமரவீரவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமித்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு கூட்டு எதிரணியினர் தரப்பில்  எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை என்று சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமித்தாலும், கூட்டு எதிரணி அரசாங்கத்தில் இணையாது என்றும், அதேவேளை சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை எதிர்க்காது என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தமது கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒருவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சிறிலங்கா அதிபர் சந்தர்ப்பம் தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளுக்கு கூட்டு எதிரணி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும், நேற்று மாலை இந்தப் பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

22 5 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 96 உறுப்பினர்கள் உள்ளனர். ஐதேக உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோரின் ஆதரவையும் இவர்கள் பெற முடியும்.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 13 ஆசனங்கள் தேவைப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி அல்லது ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியாது.

அதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றும் முயற்சிகளை, கூட்டு எதிரணியுடன் இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தீவிரப்படுத்தியுள்ளதால், கொழும்பு அரசியல் குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகளில் மீண்டும் பலவீனமடைந்துள்ளன.