உதயங்க வீரதுங்க விவகாரம்: எனக்கு எதுவும் தெரியாது!

உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவிற்கு பயணித்துக் கொண்டிருந்த ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க துபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மிக் வானூர்தி கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இவருக்கு எதிராக சிகப்பு பிடியாணை பிறப்பிக்கட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய நீல அறிக்கை பிடியாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று துபாய் பயணமாகி இருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாக சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“போதியளவு சாட்சியங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உதயங்க தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.