ஏன் அப்படி செய்தேன்? பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் “பிரபாகரன் எங்கள் தலைவர்” என கூச்சலிட்டு போராட்டம் நடத்திய போது நான், கழுத்தில் கையை வைத்து “அனைத்தும் முடிந்துவிட்டது” என்றே கூறியிருந்தேன் என்று பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு விளக்கம் கொடுத்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எல்லாம் முடிந்துவிட்டது என்றே சைகை மூலம் காண்பிடித்தேன். பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பினை ஏற்று சுதந்திர தின நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

நான் ஏற்கனவே புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளமை பற்றி அறிந்திருந்தேன்.

இதன்படி, தூதரக பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், போராட்டக்காரர்கள் இருந்த காரணத்தினால் உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருந்தோம்.

தமது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர். வெளியே செல்ல அச்சமடைந்த காரணத்தினால் அவர்களை பின் கதவு வழியாக வெளியே அனுப்பினேன்.

“இவனுகளுக்கு ஏன் பயப்பட வேண்டுமெனக் கூறி” சிங்கள இளைஞர்கள் முன் கதவு வழியாக வெளியே சென்றனர்.

இந்த இடத்தில் இனவாதம் கிடையாது. இலங்கையின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனவும், ஜனாதிபதி தமிழில் அனுப்பி வைத்த சுதந்திர தின செய்தியையும் போராட்டக்காரர்களிடம் வழங்கியிருந்தேன்.

போராட்டக்காரர்களில் இருந்த அவர்களின் தலைவர் ஒருவர், இந்த செய்திகளை எடுத்து எரித்தார். தீயிட்டு எரித்த நபரை பிரித்தானிய தூதரக பொலிஸார் கைது செய்தனர்.

அதன் போது குழப்பமடைந்த போராட்டக்காரர்கள் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகாமையில் ஓடி வந்தனர்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற அனைவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது. சீருடை அணிந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.

“பிரபாகரன் அவர் ஹீரோ” என கோசமிட்ட புலி ஆதரவாளர்களிடம் “எல்லாம் முடிந்துவிட்டது” என நான் கூறினேன். “தமிழ் ஈழம் அவர் லேன்ட்” என கோசமிட்ட போது “திஸ் இஸ் யுவர் லேண்ட்” என இலங்கை தேசிய கொடியை காண்பித்தேன்.

நான் ஒரு தடவை விரலில் காண்பித்த சைகையை புலிகளுக்கு ஆதரவான ஊடகம் பல தடவை காண்பிப்பது போன்று எடிட் செய்து ஊடங்களில் பிரச்சாரம் செய்துள்ளது.

வடக்கில், வன்னியில் மட்டுமன்றி பிரிட்டனிலும் நான் தமிழ் மக்களுக்கு எவ்வளவு சேவையாற்றியிருக்கின்றேன் என்பது தெரியும். நீங்கள் இலங்கைக்கு செல்லாது ஒவ்வொருவர் சொல்லுவதனை வைத்துக் கொண்டு குற்றம் சுமத்த வேண்டாம் என நான் சீருடையை மாற்றிக் கொண்டு போராட்டக்காரர்களிடம் சென்று கூறினேன்.

நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து இலங்கை சென்று பார்க்குமாறு கூறினேன். அந்த தருணத்தில் இலங்கையர் என்ற ரீதியில் நான் செயற்பட்ட விதம் குறித்து பெருமிதம் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை விடவும் நாடு முக்கியம் என்பதனை நான் கற்ற டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியிலிருந்து கற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையிலேயே நான் செயற்படுகின்றேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் திகதி பகல், பிரிகேடியர் பிரியங்கவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி பணி இடைநிறுத்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது பதற்றமடைய வேண்டியதில்லை என தமக்கு கூறியதாக பிரிகேடியர் பிரியங்க தெரிவித்துள்ளார்.