மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தீ விபத்துக்கு சிவன்- பார்வதியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் 50 கடைகள் எரிந்து சாம்பலாகின.
இதில் கிழக்கு கோபுர வாசல், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட பகுதிகள் பாதிக்கப்பட்டதையடுத்து மதுரை ஆதினம் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய பேரரசி மங்கையற்கரசி அழைப்பின் பேரில் மதுரைக்கு எழுந்தருளி, ஆதீனத்தை நிறுவி சைவ சமயத்தை நிலைநாட்டிய சீர்காழி தந்த திருஞான சம்பந்த பெருமான் நடனமாடிய, தரிசனம் செய்த வளாகம் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.

அந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
சைவ- வைணவ ஆலயங்கள் அறநிலைய துறைக்கட்டுப்பாட்டில் உள்ளதால் பணம் கொடுத்தால்தான் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அக்காலத்தில் கட்டப்பட்ட தூண்களுக்கும், ஆயிரங்கால் மண்டபத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றால் சிவபெருமான்- பார்வதி தேவியாரின் கோபமும், ஞானிகளின் சாபமும் தான் இந்த தீ விபத்துக்கு காரணம்.
அறநிலையத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஆலயம், ஆதினம், மடம், சைவம், வைணவம் என்றால் என்ன? என்று கூட தெரிவதில்லை, அவர்களுக்கு உரிய பயிற்சியை அரசு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணம் ஒன்றையே குறிக்கோளாக கருதி ஆலயத்தில் பணி செய்பவர்கள் இனிமேல் தங்களை திருத்திக்கொண்டால் நல்லது, ஆலய வளாகங்களில் வணிகம், வியாபாரம் நடைபெற கூடாது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய பாதுகாப்புத்துறை இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது.
இந்த அற நிலையத்துறை கோவில்களுக்கு வேண்டியதே இல்லை, அதனை கலைத்து விட்டு கோவில்களை செல்வந்தர்களிடமும், மக்களிடமும் ஒப்படைப்பதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.







