இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டும் காணப்பட்டுள்ளன.
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சாய்ந்தமருதுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் வருகைதரவிருந்தார்.
ஏற்கனவே சாய்ந்தமருதில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்வுகளில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த போதும், அந்த பிரதேச மக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, தனது வருகைகளை ஹக்கீம் ரத்துச் செய்திருந்தார்.
இந்த நிலையில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாரிய துரோகத்தினைச் செய்துள்ளதாக, அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டி, தமக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில், தமது பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் மக்கள் கேட்டிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக ஏனைய அரசியல் கட்சிகள் நடந்து கொண்டுள்ள போதிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் எதிர்த்து நின்று செயற்பட்டு வருகிறதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சாய்ந்தமருது மக்களின் ஆதரவுடன், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுயேட்சைக் குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, சாய்ந்தமருதில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் இன்றைய தினம் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்தார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இன்றைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, சாய்ந்தமருதில் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டு அவரின் வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பொது மக்கள் பிரதான வீதியின் இரு மருங்கிலும் நின்று கறுப்பு கொடிகளையும், விளக்குமாறு மற்றும் தும்புத்தடி என்பனவற்றை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.






