இன்று மனிதன் திடீரென மறைந்துவிட்டால்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு சக்கரம் என்பார்கள். அது தான் மனிதனை சோம்பேறி ஆக்கிய முதல் கண்டுபிடிப்பு என்பது தான் உண்மை. மனிதன் முன்னேற்றம் அடைந்துவிட்டேன், அதிநவீனம் அடைகிறேன் என கண்டுபிடித்த ஒவ்வொரு விஷயமும் அவனையே சீரழித்துவிட்டது.என்று நேரத்தை விஞ்சுகிறேன் என முனைப்புடன் செயல்பட துவங்கினானோ, அன்றே நேரம் அவனது காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் செய்துவிட்டது. ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி என பாடி வைத்ததும் மனிதன் தான்.நம் வளர்ச்சியில் நாம் மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவரும் வளரனும். ஆனால், நமது வளர்ச்சியல் இந்த பூமியின் வளங்களும், விலைமதிப்பற்ற உயிரினங்களும் வாழும் இடங்களும் அழிந்தன.

ஒருவேளை, இன்று மனிதன் திடீரென மறைந்துவிட்டால்? 25,000 ஆண்டுகள் கழித்து நம் உலகம் எப்படி இருக்கும்?

ஓராண்டில்…

வானுயர்ந்த கட்டிடங்கள் எழுப்ப, எட்டுவழி பாதை சாலைகள் அமைக்க, மேம்பாலங்கள், மெட்ரோ, வீட்டு மர சாமான்கள் என மனித வசதிக்காக நாம் அழித்த மரங்கள் எல்லாம். நமது சாலைகளிலும், தெருக்களிலும், கட்டுக்கடங்காமல் வளர துவங்கும். அவற்றின் கைகளை பிடித்து செடி, கொடிகள் எல்லாம் கட்டிடங்களை நெரித்து சுற்றி படரும்.

CO2 வேகமாக உறிஞ்சப்படும்!

இன்று நமது ஊர்களில் காற்று மாசடைதலுக்கு முக்கிய காரணம் வாகனம் அதிகரித்தது மட்டுமல்ல, நாம் மரத்தை அழித்ததும் தான். மரங்களின் வளர்ச்சி அதிகரித்தே அதே நேரத்தில் மக்கள் இல்லாததால் வாகனங்கள், தொழிற்சாலைகள், ஏ.ஸி. என எந்த பயன்படும் இல்லாமல் போன சூழலாலும் காற்று மாசடைந்த நிலை மாறும். CO2 வேகமாக உறிஞ்சப்படும்.

குளிர் அதிகரிக்க துவங்கும்!

கடந்த சில நூற்றாண்டுகளில் இல்லாத வெப்பம் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பதிவாகி வருகிறது என அமெரிக்கா, முதல் அமிஞ்சிக்கரை வரை செய்திகள் தீப்போல பரவியது. இந்நிலை மாறும் கோடை காலத்திலும் வெயில் குறையும். குளிர் காலத்தில் குளிர் பல மடங்கு அதிகரிக்க துவங்கும்.

கனடா!

வந்தோரை வாழ வைக்கும் ஊர் சென்னை நாம் பெருமிதம் கொள்கிறோம். அதே போல வந்தோருக்கு இல்லை என விரட்டாமல் இருப்பிடம் கொடுக்கும் நாடாக திகழும் கனடா அதிகப்படியான குளிர் காரணத்தால் 150 வருடங்களில் முற்றிலும் பனிக்கட்டிகள் சூழ்ந்த இடமாக மாறிவிடும்.

உயிரினங்கள்!

நமது பசிக்கு கோழியில் இருந்து ஆடுவரை, பல நாட்டு உணவுகளை ருசிக்கண்டோம் வேட்டையாடி. இத்தாலி ஸ்பெஷல், வியட்நாம் ஸ்பெஷல், கடல் உணவுகள் என நம் ஊரில் கிடைக்காத உணவையும் இறக்குமதி செய்து ருசித்து உண்டோம். பல உயிரினங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தினோம்.

இந்நிலை மாறும். மனிதர்களால் வேட்டையாடப்பட்ட உயிரினங்கள் சுதந்திரமாக இனபெருக்கம் செய்து, தன் எண்ணிக்கையை அதிகரித்திருக்கும்.

30 ஆண்டுகளில்!

காணும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் கட்டிடங்களும், தெருக்களும், சாலைகளும். கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்து நொறுங்கும். மண்ணோடு மண்ணாகும். ஓர் புதிய சுற்றுச்சூழல் அமையும். அது தாவரங்கள், இதர உயிரினங்கள் நிம்மதியாக வாழ வழிவகுக்கும்.

கடலில் மூழ்கிய கப்பல்களில் எல்லாம் பவளப்பாறைகள் உருவாக துவங்கும்.

60 ஆண்டுகளில்!

ஆராய்ச்சி, அறிவியல் என்ற பெயரில் மருந்து கண்டுப்பிடிக்கிறேன், அருங்காட்சியகத்தில் சிறைப்படிக்கிறேன் என முட்டாள்கள் செயலால் அழிந்த கடல் முற்றிலுமாக தன்னிலை திரும்பும். தன்னுள் குடிக்கொண்ட மீன்களின் அதே பழைய எண்ணிக்கை கொண்டு குதுகலமாக துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும். அப்போது, ஐயோ சுனாமி, சூறாவளி என அஞ்சி நடுங்க எவனும் இருக்க மாட்டான்.

500 ஆண்டுகளில்…

காடுகள் தன்னிலை அடைந்திருக்கும். ஏதேதோ காரணம் காட்டி, தனது தொழிற்சாலை கட்ட, புது நகரம் அமைக்க தனது யோகா மண்டபங்கள் மற்றும் வானுயர்ந்த பயனற்ற ஆதி கல் பிண்டங்களை எழுப்ப அழிக்கப்பட்ட காடுகள் எல்லாம் மீண்டும் உருவாகியிருக்கும். அதாவது, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலகில் காடுகள் எப்படி இருந்தனவோ, அதே போல!

25,000 ஆண்டுகளில்…

அதிகபட்சம் இன்றுவரை பத்தாயிரம் ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்டுள்ள மனிதனின் அடையாளம் என அணு கழிவுகள் மட்டுமே இருக்கும். ஏனைய அனைத்தும் மாறி இருக்கும், மறைந்திருக்கும்.

வளர்ச்சி, வளர்ச்சி என மனிதன் கண்டுப்பிடித்த அனைத்தும் மாபெரும் வீழ்ச்சிக்கான விதை என்பபது இப்போது தான் தெரிகிறது. என்று தன்னலம் மட்டும் கண்டு சுயநலவாதிகளானாமோ அன்றே நமது அழிவு துவங்கிவிட்டது. நாமும், அழிந்து, இந்த உலகையும் அழிக்கிறோம் என நாம் ஆங்காங்கே குறிப்பிடுவோம். அது தவறு. மனிதன் அழிவான். அதன் பின் சில நூறு ஆண்டுகளில் உலகம் தன்னிலை மீண்டும் அடைந்துவிடும். அதற்கான சான்று தான் இது.