அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் பிரதமர்!!

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி
மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயம் அறிவிக்கப்பட வேண்டும்.இந்நிலையில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் கூட்டணிக் கட்சியான ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை சிறிசேன கடுமையாக விமர்சித்து வருகிறார்.நாட்டில் நிலவும் ஊழலுக்கு ஐக்கிய தேசிய கட்சிதான் காரணம் என்று அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறிசேனவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவும் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சவின் புதிய கட்சி சிறிசேன கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ராஜபக்சவுக்கும், சிறிசேனவுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் சிறிசேனவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது.

இத்தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதும், கட்சித் தலைமையை அவரிடம் ராஜபக்ச அளித்து விட்டார். இருப்பினும், சிறிசேன தொடர்ந்து 2-ஆவது முறையாக பதவி வகிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இதனால் சிறிசேனவுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது என கூறப்படுகிறது.இத்தேர்தலில், ஜனாதிபதி பதவி வேட்பாளராக ரணில் விக்மசிங்கவை ஐக்கிய தேசிய கட்சி முன்னிறுத்தலாம் எனவும் தெரிகிறது.அண்மைய நாட்களாக அரசாங்கத்தினுள் உள்ள பாரிய பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. பிணை முறி மோசடி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ளநிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க முதல் தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர வரை ஜனாதிபதிக்கு வில்லன்களாகவே மாறியுள்ளனர். இதனால் தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின் பின் நிதியமைச்சை ஜனாதிபதி தன் வசப்படுத்தவுள்ளார்.

பிணை முறி மோசடி விவகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஐதேக அரசின் தேனிலவை உடைத்துப் போடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. தென் பகுதியில் வளர்ந்து வரும் கூட்டு எதிரணியின் செல்வாக்கினால் தடுமாறிப் போயுள்ள தற்போதைய கூட்டரசு செய்வதறியாது திகைத்துப் போயுள்ளது.மெல்ல மெல்ல உடைந்து கொண்டிருக்கும் மைத்திரி – ரணில் கூட்டாட்சி எதிர்வரும் 2020 ஜனாதிபத் தேர்தலுடன் முற்றாக உடைந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாமென கூறப்படுகின்றது .இதனை ஐ.தேகவின் உள்வீட்டுத் தகவல்களும் உறுதி செய்துள்ளன.