ரேசன் கடையை ஒழிப்பதே.. தமிழகத்தை இந்த நிலைக்கு ஆளாக்க தான்.. IMF-ன் பரிந்துரையில் பேரில் அரங்கேறும் அறிவியல் சதி..??

இந்தப் படங்கள் சோமாலியாவில் எடுக்கப்பட்டதல்ல. இவர்கள் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் அடிமைப்படுத்திக் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் அல்ல. இவர்கள் 1876 முதல் 1878 வரையான மெட்ராஸ் பஞ்சத்தில் பலியாக்கப்பட்ட தமிழர்கள்.

பல நூற்றாண்டு காலங்களில் பல்வேறு சமயங்களில் தமிழக நிலப்பரப்பு கடுமையான வறட்சியை சந்தித்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் பஞ்சத்தினால் இப்படிப்பட்ட கோர நிலையை தமிழினமும், தென்னிந்திய சமூகமும் அடைந்ததில்லை.

ஆனால் உலக ”வளர்ச்சி” நிலையின் முக்கியமான காலக்கட்டம் என்று சொல்லப்படும் 19ஆம் நூற்றாண்டில் தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஒரு கோடி பேர் பலியாக்கப்பட்டார்கள்.

இந்த பஞ்சம் என்பது ஒரு இயற்கை பேரழிவு என்று சர்வசாதாரணமாக நம் பாடபுத்தகங்களில் சொல்லி விட்டு கடக்கப்படுகிறது.

ஆனால் இது வெள்ளை ஏகாதிபத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை என்பது நம் கண்களிலிருந்து மறைக்கப்படுகிறது.

இந்த பஞ்ச காலத்தில்தான் மெட்ராஸ் கடற்கரையிலிருந்து பல லட்சம் டன் தானியங்கள் இங்கிலாந்திற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. அப்படியெனில் இது எப்படி இயற்கை பஞ்சமாகும்?

ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே இந்த பஞ்சம் குறித்தும், அதற்கு காரணமான ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் நேர்மையான மதிப்பீட்டினை செய்திருக்கிறார்கள்.

மக்களுக்கு தேவையான உணவு அரசிடம் இருந்தது. ஆனால் வாங்கும் பொருளாதார சக்தி மக்களிடம் இருக்கவில்லை.

அந்த அளவுக்கு அவர்கள் வரிக்கொடுமையினாலும், இன்னபிற பொருளாதார மாற்றங்களாலும் சுரண்டப்பட்டிருந்தனர். திடிரென ஏற்பட்ட வறட்சியை தாங்கும் சக்தி அவர்களிடம் இருந்து உறிஞ்சப்பட்டிருந்தது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

”சந்தை விலையில் அரசு தலையிடக் கூடாது. அரசு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை செய்திடக் கூடாது. சந்தைதான் விலையை முடிவு செய்ய வேண்டும்” எனும் ”ஆடம் ஸ்மித்”-ன் பொருளாதாரக் கொள்கை இந்திய அரசின் ஆட்சிப்பிரகடனமாக இருந்த காலம் அது.

வறட்சி என்பதற்கும், பஞ்சம் என்பதற்குமான வரையறைகள் வெவ்வேறானவை, வறட்சியை இயற்கை தீர்மானிக்கிறது.

பஞ்சத்தினை பொருளாதாரக் காரணிகள் தீர்மானிக்கின்றன. வெளிப்படையாக சொல்வதென்றால் அரசும், அதனுடைய பொருளாதாரக் கொள்கைகளும் தான் பஞ்சத்தினையும், அதன் முடிவுகளின் வீரியத்தையும் தீர்மானிக்கின்றன.

அன்றைக்கு மானிய விலையில் மக்களுக்கு பொருள் வழங்கும் ரேசன் முறை இருந்திடவில்லை. விளைந்தாலும், விளையாவிட்டாலும் கொடும் வரியை அடித்துப் பிடுங்கக் கூடிய நிலையை ரயத்துவாரி முறை உருவாக்கி இருந்தது.

பணமிருந்தவர்கள் மட்டுமே பிழைத்தனர். அடித்தட்டு உழைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தனர்.

இன்றைக்கு இந்தியா கையெழுத்திடும் WTO ஒப்பந்தங்கள் “சந்தைதான் விலையை முடிவு செய்ய வேண்டும்” எனும் ஆடம் ஸ்மித்தின் கொள்கையைத்தான் மேற்கோள் காட்டுகின்றன. IMF-ன் பரிந்துரையில் இந்தியாவின் வரி விதிப்பு முறைகளில் சமீப காலங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் மாற்றங்கள் பஞ்ச காலத்தையே நமக்கு நினைவூட்டுகின்றன.

உண்மையில் சொல்லப்போனால் இந்திய சமூகத்தில் பஞ்சம் எப்போதுமே நடைமுறையில் இருக்கிறது. அதன் வீரியங்கள் தான் பல்வேறு காலங்களில் மாறுபடுகின்றன. பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்க உருவாக்கப்பட்டதுதான் ரேசன் முறை.

அதுதான் இன்று ஒழிக்கப்பட இருக்கிறது. உணவு சேமிப்புக் கிடங்குகள் மூடப்பட உள்ளன. எனில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடிய சிறு வறட்சியில் கூட இந்த அரசு எப்படி மக்களுக்கு உணவளித்து காப்பாற்ற இயலும்.

மறைக்கப்பட்ட பஞ்ச கால வரலாற்றின் உண்மையான பக்கங்களை நாம் படிக்கவில்லை என்றால், மீண்டும் ஒரு பஞ்சத்திற்கு நாம் நிச்சயம் தள்ளப்படுவோம்.

தென் ஆப்ரிக்காவிற்கும், மலேசியாவிற்கும், பர்மாவிற்கும், ஃபிஜி தீவுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அரை அடிமைகளாக தமிழன் இழுத்துச் செல்லப்பட்ட நிலைமை மீண்டும் உருவாகும்.