மகிந்த ராஜபக்ச என்ன ஆட்டம் போட்டாலும் அவரால் கனவிலும் கூட ஜனாதிபதியாக வரமுடியாது என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம் பலாங்கொடையில் மேற்கொண்ட போது, பேசிய அவர்,
இன்று சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியானது இனவாதத்தைத் தூண்டி முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருவதாக கூட்டு எதிர்க் கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்புகின்றார்கள்.
இவர்கள் மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணுகின்றார்கள். எமது மக்கள் மிகவும் சிந்திக்கதக்கவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு சிலரே ஏமாந்து போவார்கள்.
கூட்டு எதிர்க் கட்சியினரால் இனவாதத்தை தூண்டாமல் தேர்தலில் வெற்றி பெறமுடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவோ நாட்டின் தலைவராகவோ ஒருபோதும் வரமுடியாது.
நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் இனங்களுக்கிடையில் இடம்பெற்று வந்த பிரச்சினைகளை தீர்ப்பதாக தெரிவித்தோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படியே இன்று கோவில்களோ, பள்ளிவாசல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படுவதில்லை.
அதேவேளை, நீதிமன்ற சுயாதீனத் தன்மையை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தோம். இன்று அரசியல்வாதிகள் எவருமே நீதித்துறை சார்ந்து எந்தவிதமான தலையீடுகளையும் செய்வதில்லை.
உங்களால் முடியுமானால் நான்கு தலைமுறை அமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுகளவேனும் திருடியிருந்தால் அதனை நீங்கள் நிரூபியுங்கள்.
நீங்கள் அப்படி நிரூபித்தால் நான் உடனடியாகப் பதவி விலகுகிறேன். எங்கள் தலைவரைப் பற்றி எங்களுக்கே அதிகம் தெரியும். அவர் மீது எங்களுக்கு அதிகளவில் நம்பிக்கை இருக்கிறது.
மகிந்த ராஜபக்ச கனவிலும் கூட இனிமேல் நாட்டின் தலைவராக முடியாது. அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் வரமுடியாது என்றார்.






