எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தலைமையில் புதிய ஆட்சி மலரவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் இருந்து விலகி சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராக உள்ளதாகவும் குறித்த அமைச்சர் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மைத்திரி தலைமையில் புதிய ஆரசாங்கத்தினை அமைக்க ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவை பிரிந்து மைத்திரியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் சுதந்திரக்கட்சியின் அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மத்திய வங்கியின் ஊழல் மற்றும் மஹிந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் போன்றவற்றிக்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமாயின் ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகி, புதிய பிரதமர் நியமிக்கவேண்டிய அவசியம் உள்ளதாக சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







