தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து, கல்லூரி பேருந்தின் மீது மோதல்!

மதுரை அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து, கல்லூரி பேருந்தின் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முறையான பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு அரசு பேருந்துகளை அதிகாரிகள் இயக்கி வருகின்றனர். இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் அரசு பேருந்துகளை பார்த்தாலே பயந்து பயணிக்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், செந்தில் என்ற தற்காலிக ஓட்டுநர் ஒருவர் திருச்சியிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்தை ஒட்டி சென்றார். அப்போது, மதுரை உத்தங்குடி அருகே சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயற்சிக்கும்போது அதன் பின் பகுதியில் மோதியது. இதில் இரு பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த மற்றும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 10 பேரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்காலிக ஓட்டுநர் செந்திலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

images (3)