அரசு தான் அலட்சிய போக்குடன் செயல்பட்டு மக்கள் வாழ்வை கடந்த இரண்டு நாட்களாக சீரழித்து வருகிறது.
அதற்காக அன்றாட வாழ்வை இழந்து விட முடியுமா..? ஏதாவது ஒரு வகையில் பிழைப்பை பார்த்தால் தானே குடும்பம் கஞ்சி குடிக்க முடியும்.
போக்குவரத்து தொழிலார்கள் வேலை நிறுத்தம் செய்தாலும், மாற்று பயண வகையை நோக்கி மக்கள் சென்றதன் விளைவாக சென்னை மாநகர், புறநகர் மின்சார ரயில்களில் வெள்ளிக்கிழமை மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை முதலே அனைத்து மின்சார ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடைகளில் கூட நிற்பதற்கு இடமில்லாத அளவுக்கு பயணிகளின் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
ரயில்கள் நடைமேடையை வந்தடைவதற்கு முன்பே பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறுவதற்கு தயாராயினர்.
சென்னையில் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர் காலையில் மின்சார ரயிலில் பயணம் செய்வதில் பெரும் அவதிக்குள்ளாயினர்.
பலரும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தைத் தொடர்ந்தனர். இதேபோல் மெட்ரோ ரயிலில் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை சுமார் 59 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் விபத்துகள் உண்டாக கூடும் என்று கணித்துள்ளனர். போக போக நெரிசல் கூடி கொண்டே சென்று வட மாநில ரயில் நிலையங்களை போல ஒழுங்கில்லாமல் மாறி விடும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் பிடிவாதத்தால் பேருந்து வசதியில்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக பேச்சு நடத்த தமிழக அரசு எப்போது அழைத்தாலும் அதில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனவே, தமிழக அரசு உடனடியாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஊதிய உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






