உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது’- மகனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

சேலம் குகை, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (55). இவரது மனைவி சந்திரகலா (50). இவர்களுக்கு அருண் பிரகாஷ், ஜெய்கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடராஜன், துணி வியாபாரம் செய்துவருகிறார்.  அருண்பிரகாஷ் பெங்களூருவிலும், ஜெய்கார்த்திக் தாய்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலைபார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தன் மகன் அருண்பிரகாஷிற்கு, ”உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. நானும், அம்மாவும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” என்று ஒரு கடிதத்தில் எழுதி, அதில் வீட்டு சாவியையும் வைத்து கூரியர் அனுப்பிவிட்டனர். அந்தக் கடிதம், நேற்று மாலை பெங்களூருவில் உள்ள அருண்பிரகாஷ் கையில் கிடைத்திருக்கிறது. அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த அருண்பிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே  செல்போன்மூலம் சேலத்தில் உள்ள தாய் வழி சொந்தக்காரர்களிடம் விவரத்தைச் சொல்லி, வீட்டுக்குச் சென்று அப்பாவையும் அம்மாவையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

salem_suicide_14120இதையடுத்து, அவர்கள் நேற்று இரவு அருண்பிரகாஷ் வீட்டுக்குச் சென்று பார்க்கும்போது, வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  அதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வந்த போலீஸார்,  உள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார்கள். அப்போது,கட்டிலில் நடராஜன்- சந்திரகலா ஆகியோர் சடலமாகக் கிடந்தார்கள். வீட்டுக்குள் விஷம் அருந்திய பாட்டிலும் இருந்தது. மேஜைமீது 4 பக்கத்துக்கு  உருக்கமான ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தையும், விஷம் அருந்திய பாட்டிலையும் போலீஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரின் உடல்களையும் மருத்துவப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மிகுந்த வேதனை அடைந்தார்கள். இதுபற்றி செவ்வாய்ப்பேட்டை போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், ”ஒரே வீட்டின் கீழ் தளத்தில் நடராஜனும், மேல் தளத்தில் அவரது தம்பி விஜயராகவனும் குடும்பத்தோடு வசித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, நடராஜனின் அப்பா சோமசுந்தரம் நடராஜனின் மகன்கள் அருண்பிரகாஷ், ஜெய்கார்த்திக் பெயரில் சொத்துகளை எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, விஜயராகவனை காலிசெய்யச்சொல்லி நடராஜன் கூறி இருக்கிறார். ஒரு கோடி கொடுத்தால்தான் காலிசெய்வேன் என்று கூறி, காலிசெய்ய மறுத்திருக்கிறார். இதனால் அண்ணனுக்கும் தம்பிக்கும் தொடந்து சண்டை நடந்துள்ளது. விஜயராகவன், அண்ணன் நடராஜனையும் அண்ணி சந்திரகலாவையும் அசிங்கமாகத் திட்டி இருக்கிறார். இதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.