தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை செய்த வைத்தியர் ஒருவர், மறதியின் காரணமாக கத்தரிக்கோலை அவரது வயிற்றுக்குள் வைத்துவிட்டு, அறுவைசிகிச்சை செய்ததால், அந்த பெண் பரிதாபமாக பலியான சம்பவமானது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின், அலகாபாத்தில் இடம்பெற்றுள்ளது.

அலகாபாத் அருகில் உள்ள ஜமாஹா என்ற கிராமத்தை சேர்ந்த அசோக் சோனி என்பவரின் மனைவி, பிரியா சோனி, கடந்த ஒக்டோபர் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒக்டோபர் 29ஆம் திகதி, அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னர் சில நாட்களில் அவர் வீட்டிற்கு விடப்பட்டார்.
வீட்டிற்கு விடப்பட்ட பின்னரும் பிரியாவுக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (11.12.2017) அதிகமான வயிற்றுவலியால் அவர் அவதிப்பட்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






