முதலாவது வேட்புமனுத் தாக்கல் ஈபிடிபி, சாவகச்சேரி நகரசபைக்கு!

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்றுத் தொடக்கம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

epdpசாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை மறுநாள் நண்பகல் வரை வேட்பமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த நிலையில், சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனு இன்று ஈபிடிபியினால் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முதலாவது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஐதேகவும் கட்டுப்பணம்

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

மகிந்த அணி கிளிநொச்சி, மன்னாரில்  கட்டுப்பணம் 

கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள கரைச்சிப் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் எஸ்எம்.ரஞ்சித் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம்

அதேவேளை, அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் முல்லைத்தீவு, அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக கட்சியின் முகவர் திலகநாதன் கிந்துஜன் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக தமிழ் காங்கிரசின் சார்பில், கட்சியின் செயலர் செல்வராசா கஜேந்திரன் நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.