நாடளாவிய ரீதியில் பரீட்சைகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்காவில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

 நாடளாவிய ரீதியில்  பரீட்சைகள் ஆரம்பம் – சிக்கல்களுக்கு மத்தியில்  மாணவர்கள்

பழைய , புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைகள்  எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்த பரீட்சையில் பாடசாலை ரீதியாக புதிய பாடத்திட்டத்திற்கு 4 இலட்சத்து 14 ஆயிரத்து 694 பேரும், பழைய பாடத்திட்டத்திற்கமைய 14 ஆயிரத்து 799 பேரும்  மற்றும் தனிப்பட்ட ரீதியாக புதிய பாடத்திட்டத்தில் 99 ஆயிரத்து 506 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 1 இலட்சத்து 59 ஆயிரத்து  574 பேரும் என மொத்தமாக 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள்  பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதன்போது பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சைக்கு தோற்ற தடை விதிக்கப்படும் எனவும்,  அவர்களது பெறுபேறுகளும் ரத்துச் செய்யப்படும் எனவும் பரீட்சைகள்  ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை,  ஸ்ரீலங்காவில் புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

எனினும், மாணவர்கள்  மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மேலதிகமாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்திருந்தது.

இதற்கமைய, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேடமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மலையகப்பகுதிகளில் சீரற்ற காலநிலைக்கு மத்தியில்  இன்று பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.