மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு!

தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பாக நேற்று(05) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இருந்து கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆகவே கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடற்கரையை அண்டியுள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

GA_Dutyநேற்றையதினம்(05) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திடீர் சந்திப்பொன்றினை நடாத்தியிருந்தார்.

இந்தச்சந்திப்பில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான துறைசார் நிபுணர்கள், பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் கருத்துரைக்கையில்…

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களை விழிப்பூட்டும் நோக்கிலும், அவர்களுக்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளும் நோக்கிலும் எமது மாவட்ட செயலகத்தில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்தம் தாழமுக்கமாக மாற்றமடைந்து வருவதனால் தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதன்காரணமாக கரையோரத்தில் கடும் காற்று மணிக்கு 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடலுக்கு செல்லும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலோரத்தை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைக்கு சூறாவளி வீசுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும், எனினும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் குறிப்பாக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் 5ம், 6ம், மற்றும் 7 ஆம் ஆகிய திகதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட காரியாலயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றும்(06)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.