
இந்திய நாட்டின் 125 கோடி மக்கள் தான் தனக்கு கடவுள் என குஜராத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத் மாநிலத்தில் வரும் 9ம் மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து வரும் சூழ்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக குஜராத் மக்களால் ஏற்கெனவே மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நாட்டின் பிரதமராக உள்ள மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி இந்திய நாட்டின் 125 கோடி மக்களே தனது கடவுள் என தெரிவித்து இருக்கிறார். மேலும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளநிலையில், அது குறித்து மறைமுக விமர்சித்த பிரதமர் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாத காங்கிரஸ் கட்சி எவ்வாறு நாட்டிற்கு வளர்ச்சியை தரப்போகிறது எனவும் அவர் தெரிவித்தார்.






