ஒகி புயலின் ருத்ரதாண்டவம் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி நேற்று (30-11-2017) ‘ஒகி’ புயலாக வலுவடைந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயலும் கனமழையும் கைகோத்து ஆடிய இந்த ருத்ரதாண்டவத்தில், கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளானது. இங்கு ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன; ஏராளமான மின்கம்பங்களும் புயலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளித்துக் காணப்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால், நிரம்பிவழியும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபப் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வெறிச்சோடிக் காணப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில், மேலப்பாளையம், மாஞ்சோலை, குற்றாலம் பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. சூறைக்காற்றினால், லட்சக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், ஏராளமான உப்பளங்கள் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கனமழையின் தாக்கம் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 30 மி.மீ மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. குடியிருப்புகளில் மழைத்தண்ணீர் புகுந்துள்ள இடங்களில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்வதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலும் குறிப்பிட்ட 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க இதுவரையில், மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் பரவலாக கனமழை பெய்துவரும் சூழ்நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சம் நிலவிவருகிறது.
2004-ஆம் வருடம் டிசம்பர் மாதம் சுனாமி தாக்குதலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான தானே புயல் கடலூர் மாவட்டத்தையே சுழற்றியெறிந்துவிட்டுப் போனது. 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வரலாறு காணாத பெருமழையினால் உருவான வெள்ளப் பெருக்கு துவம்சம் செய்துவிட்டுப்போனது.
இப்படிக் கடந்த சில ஆண்டுகளாக ‘டிசம்பர்’ மாதத்தில், கோரத் தாண்டவம் ஆடிவரும் பேரிடர்களால், ஒட்டுமொத்தத் தமிழகமுமே பீதியில் உறைந்துள்ளது. தற்போது ஒகி புயலோடு கனமழை பொழிந்துவரும் இந்நேரத்தில், ‘தமிழகத்தை சுனாமி தாக்கவிருப்பதாக’ செய்திகள் கிளம்பின. ஆனால், இந்தச் செய்திகளை உடனடியாக மறுத்த வானிலை மையம் ‘இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்’ என்று ஆறுதல்தந்தது.
இந்நிலையில், ஒகி புயலை அடுத்து ‘சாகர் புயல்’ தமிழகத்தைத் தாக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது தமிழக மக்களின் பயத்தை அதிகரிக்கச்செய்துள்ளது. இதற்கிடையில், டிசம்பர் 3 அல்லது 4 ஆம் தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!