அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் வழங்கும் ‘பெர்சன் ஆஃப் தி இயர்’ (இந்த ஆண்டுக்கான மனிதர்) சிறப்பிதழுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கான நேர்காணலுக்கு தாம் மறுத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதற்கு அந்த இதழ் மறுப்பு தெரிவித்துள்ளது.
டைம் இதழில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், ‘ஒருவேளை’ இந்த ஆண்டும் அவர் இந்த ஆண்டுக்கான மனிதர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் பட்டத்துக்கானவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை டிரம்ப் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டைம் இதழால் ‘பெர்சன் ஆஃப் தி இயர்’-ஆக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டிருந்தார். டைம் இதழின் அட்டைப்படத்தில் அதிக முறை இடம் பெற்றது தாம்தான் என்று அவர் பொய்யாகக் கூறியிருந்தார்.
அந்த இதழ், 1927 முதல் நல்ல அல்லது தீய காரணங்களுக்காக, அந்த ஆண்டு அதிகம் தாக்கத்தை உண்டாக்கிய மனிதர்களை ஆண்டுக் கடைசியில் தேர்வு செய்து வருகிறது.
அந்த நபரைத் தேர்வு செய்ய வாசகர்களை வாக்களிக்குமாறு டைம் இதழ் கூறினாலும், ஆசிரியர் குழுவே இறுதி முடிவெடுக்கிறது.
ஒரு வேளை தேர்வு செய்யப்படலாம் என்று கூறி இருந்தால், அவ்வாறு தேர்வு செய்யப்படுவதில் இருந்து டிரம்ப் தவறிவிட்டார் என்று டைம் இதழின் முன்னாள் ஆசிரியர் ரிச்சர்ட் ஸ்டெங்கல் கூறியுள்ளார்.
“அவர்கள் புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதி கேட்டிருக்கலாம். ஆனால், அந்தப் போலியான டைம் முகப்பு அட்டைகளை எங்காவது நீங்கள் வைத்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், டிரம்பின் கோல்ஃப் மைதானங்களில் அவரைப் பாராட்டி டைம் இதழ் செய்தி வெளியிட்டிருப்பது போன்ற படங்கள் மாட்டப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.







