வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை: ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, பனப்பாக்கம் அரசு பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 24) கிணற்றில் குதித்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்கள் பயின்று வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ராமாமணி மற்றும் ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார்.

11ம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள் -தீபா, மனிஷா, சங்கரி மற்றும் ரேவதி ஆகியோர் கடந்த வெள்ளியன்று பள்ளிக்கு அருகில் இருந்த 83 அடி ஆழக்கிணற்றில் விழுந்ததாகவும், அவர்களின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் கேட்டபோது மாணவிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் கூறியதையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவாகியுள்ளது என்றார்.

”நான்கு மாணவிகளின் பெற்றோரையும் அழைத்துவரவேண்டும் என்று கூறியதால் அவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் கூறுகின்றனர். பெற்றோர்களின் அலைபேசி எண் பள்ளிக்கூட அதிகாரிகளிடம் உள்ளதால், அவர்கள் நேரடியாக பெற்றோரிடம் பேசியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த மாணவிகள் தங்களாக இந்த முடிவை எப்படி எடுத்தார்கள் என்றும் விசாரித்து வருகிறோம்,” என்றார் பகலவன்.

இந்த நான்கு மாணவிகளின் மரணம் வளரும் இளம்பருவ குழந்தைகளுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை தடுக்க நாம் உடனடியாக வேலை செய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது என்கிறார் சமூக ஆர்வலர் தேவநேயன்.

”நம்முடைய வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் ஆக இருக்கவேண்டும். பாடத் திட்டத்தில் நவீன யுக கருத்துக்கள் வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் பாடம் கற்பிக்கும் முறையில் எந்தவிதத்திலும் மாற்றத்தை செய்யவில்லை. ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்கவேண்டும். மாணவர்களிடம் உள்ள பிரச்சனை என்ன என்பதை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள எந்த முயற்சிகளும் எடுப்பதாக தெரியவில்லை. குழந்தைகளிடம் பேசுவதற்கோ, அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கோ ஏற்ற சூழல் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் தேவநேயன்.

நான்கு மாணவிகளும் ஒரே நேரத்தில் இறந்துள்ளதால், பிற குழந்தைகளிடம் பேசி தற்கொலை தேவையற்றது என்பதை உணர்த்தவேண்டும் என்கிறார் ஸ்னேஹா தற்கொலை தடுப்பு உதவி எண் மையத்தை நடத்தும் மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.

”ஒரு குழுவாக மாணவிகள் தற்கொலை செய்திருந்தாலும், அதில் ஒருவருக்கு மட்டுமே தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்திருக்கும். இதுபோன்ற குழுவாக குழந்தைகள் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், அதை கண்டறிவது சிரமமான ஒன்று. என்னிடம் ஆலோசனைக்கு வந்த பல ஆசிரியர்கள், மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில், மன உளைச்சலுடன் இருப்பதாக கூறியுள்ளனர்,” என்று மருத்துவர் லட்சுமி பிபிசி தமிழிடம் கூறினார்.