ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு மையத்தில் நுழைந்த போலீசார்

ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்பட்டு வந்த, மேனஸ் தீவில் உள்ள, தஞ்சம் கோரி வந்தோர் தடுப்பு மையத்தில் பப்புவா நியூ கினியா காவல் துறையினர் நுழைந்துள்ளதை ஆஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மேனஸ் தீவில் உள்ள மூடப்பட்ட தடுப்பு மையம் (கோப்புப் படம்)

போர் உள்ளிட்ட காரணங்களால் பிற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்தவர்களை பசிபிஃக் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான மேனஸ் தீவு மற்றும் நௌருவில் உள்ள தனது தடுப்பு மையத்தில் ஆஸ்திரேலிய அரசு தங்க வைத்தது.

அது சட்டவிரோதமானது என்றும் தஞ்சம் கோரி வந்தவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்றும் பப்புவா நியூ கினியா நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடந்த அக்டோபர் 31 அன்று அந்த மையம் மூடப்பட்டது. எனினும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், மாற்று இடங்களில் குடியேற மறுத்தனர்.

பப்புவா நியூ கினியா காவல்துறையால் தாங்கள் வெளியேற ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

“ஆஸ்திரேலிய மக்கள் அகதிகளுக்கான புதிய வசதிகளை செய்வதற்காக அவர்கள் வரிப்பணத்தில் இருந்து 10 மில்லியன் டாலர் பணம் வழங்கியுள்ளனர். தஞ்சம் கோரி வந்துள்ளவர்கள் அங்கு குடிபெயர்வதையே நாங்கள் விரும்புகிறோம்,” சிட்னி வானொலி நிலையத்திடம் பேசிய ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் பீட்டர் தட்டன் கூறியுள்ளார்.

வியாழன்று மேனஸ் தீவில் அகதிகளை வெளியேற அறிவுறுத்தும் பப்புவா நியூ கினியா காவல் அதிகாரிகள்

“இது பப்புவா நியூ கினியா காவல்துறை மற்றும் அதிகாரிகள் தொடர்பான விடயம். ஆனால், காவல்துறையினரை உள்ளடக்கிய நடவடிக்கை ஒன்று இன்று காலை அங்கு நடந்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

தாங்கள் தங்கியிருந்த அந்த மையத்தின் வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் வந்ததாக, அப்துல் அஜீஸ் ஆடம் எனும் அகதி கூறியுள்ளார்.

“அவர்கள் தங்கள் கைகளில் பெரிய ஒலிபெருக்கிகளை வைத்திருந்தனர்.’நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கூறினார்கள்,” என்றும் பிபிசியிடம் அவர் கூறினார். காவல்துறையினரின் நடவடிக்கை ஆவேசமானதாக இருந்தது என்று அவர் விவரித்தார்.

தடுப்பு மையம்

தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு அந்த மையத்தின் ஒரு பகுதியில் 420 அகதிகள் கூடியுள்ளனர். ஆனால், ‘அவர்கள் கேட்க மாட்டார்கள்’ என்றும் அவர் கூறினார்.

உணவுப் பொருட்களின் வரத்து குறைந்துள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் எதுவும் இல்லாமல் அவர்கள் மூன்று வார காலத்தை அங்கு கழித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தால் அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். தஞ்சம் கோரி வந்தவர்கள் கடந்த காலங்களில் தாக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர்.

அவர்கள் தங்குவதறகான மாற்று இடம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசும் பல முறை கூறியுள்ளது.

ஆனால், அங்கு இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது. மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆட்கடத்தல் மற்றும் கடல் பயணங்களின்போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க ஆஸ்திரேலியா ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.