சசிகலா குடும்பத்தில் சிக்கிய பணம், தங்கம், ஆவணம் எவ்வளவு! – ஐ.டி அதிகாரிகள் விளக்கம்

சசிகலா குடும்பத்தினரிடையே நடந்த சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும், சோதனையின்போது 7 கோடி ரூபாய், 5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ. 1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

poes garden

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினரிடையே இதுவரை இல்லாத வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே?

“சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். எங்களுக்கு கிடைத்த தகவல்படி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.”

சோதனையில் என்னென்ன ஆவணங்கள் சிக்கின; அவற்றின் மதிப்பு என்ன?

“சோதனையின்போது 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. சீல் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் திறந்து சோதனை நடந்துவருகின்றன. இதுவரை கிடைத்த தகவலின்படி 7 கோடி ரூபாய், 5 கோடி மதிப்புள்ள தங்கம், 1,430 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக விரிவான விசாரணை நடந்துவருகிறது.”

விவேக் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் சிக்கியவை எவை?

“விவேக்கிடமிருந்து கைப்பற்றிய பொருள்கள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளோம். விசாரணை நடந்துவரும் நேரத்தில் அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மேலும், மதிப்பீடு பணிகளும் நடந்துவருகிறது. அதுதொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும்.”

போயஸ் கார்டன் வீட்டில் திடீரென சோதனை நடத்தியது ஏன்?

“போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மட்டுமல்ல… அவருடன் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் தங்கியிருந்தனர். மேலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கும் அங்கு தனியாக அறை உள்ளது. முதலில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு கிடைத்த லேப்டாப், பென்டிரைவ்கள், கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்துவருகிறோம். போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டவுடன் அதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றோம். பிறகு அந்த வீட்டின் சாவி வைத்திருந்த இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்குத் தகவல் தெரிவித்து அங்கு சோதனை செய்தோம்.”
சோதனையின்போது சசிகலாவின் பினாமிகள் குறித்த தகவல்கள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறதே?

“சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுடைய பினாமிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளன. பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆலோசித்துவருகிறோம். பினாமிகள் குறித்த விவரங்கள் ரகசியமாக உள்ளன. அவர்களைக் கண்டறிய அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம்.”

சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்தப்படுமா?

“சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா, இளவரசி குடும்பத்தினரிடம் விசாரணை நடந்துவருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்துவோம்.”

சசிகலா குடும்பத்தில் வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்துவிட்டதா?
“இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். ஜெயலலிதாவின் நிழலில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் 33 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளனர். தற்போதுகூட சொத்துக்குவிப்பு வழக்கில்தான் சசிகலா சிறைக்குச் சென்றுள்ளார். அந்த வழக்கிலிருந்துதான் இந்தச் சோதனையே ஆரம்பித்தது. நீண்ட காலமாகக் கண்காணித்து சோதனை நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ளோம். அரசியலில் பழிவாங்குவதற்காக இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் கடமையைச் செய்துள்ளோம். சசிகலா குடும்பத்தினரிடையே அடுத்தகட்ட சோதனை விரைவில் நடத்தப்படும்.”