இலங்கையில் முதலாவது தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரிய அரசாங்க உதவியின் கீழ் ஹோமாகம பிரதேசத்திற்கு அருகில் இந்த தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப நகரத்தின் பிரதான திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நடவடிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்ப நகரின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான துறைகள் சம்பந்தமாக புதிய உற்பத்திகளை உருவாக்குவது தொழில்நுட்ப நகரின் பிரதான நோக்கமாகும்.
2030ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், அணுசக்தி கொண்ட நாடாக மாற்றிக் கொள்வதும் ஒரு நோக்கமாக காணப்படுகின்றது. அது சிவில் பொது மக்களின் பயன்பாட்டின் அவசியத்திற்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொழில்நுட்ப ஊடாக ஆசியாவின் பிரபலமான மற்றும் பலமான நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் ஊடாக 37,000 தொழில்வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் புவியியல் அமைப்பு இயற்கையாகவே அமைந்த கொடையாக உள்ளது. உலக வரைபடத்தில் இலங்கை சிறிய நாடாக இருந்த போதும், இங்கு சகல வளங்களும் கொண்ட நாடாக காணப்படுகிறது.
இலங்கையின் புவியியல் அமைப்பு காரணமாக அதன் நன்மைகளை பெற்றுக்கொள்ள அமெரிக்கா, சீனா, இந்தியா, உள்ளிட்ட பல நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கை தற்போது அபிவிருத்தி பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப நகரின் ஊடாக ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டம் இலங்கையின் அசுர வளர்ச்சிக்கு உறுதுணையாக மாறும்.
இவ்வாறான வளர்ச்சி ஆசிய கண்டத்தை தாண்டி உலக நாடுகளுக்கும் சவாலாக மாறும். இது சிங்கப்பூரின் எழுச்சியை தாண்டி பல மடங்கு விஸ்வரூபம் எடுக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.