தலைநகர் டெல்லி, காற்று மாசு காரணமாக தவித்து வருகிறது. நல்ல காற்றைத் தேடி டெல்லி வாசிகள் அலைகின்றனர். இந்த சூழலில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, சுற்றுச்சூழல் செஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட 787 கோடி நிதியைக் கூட செலவழிக்காமல் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சஞ்சீவ் ஜெயின் என்பவர், டெல்லி அரசு வசூலிக்கும் சுற்றுச்சூழல் செஸ் குறித்து கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு டெல்லி அரசு அளித்த பதிலில், 2015-ம் ஆண்டு சுற்றுச்சூழல் செஸ் ஆக 50 கோடி வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு 387 கோடி ரூபாய், இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை 787 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் 2016-ம் ஆண்டு 93 லட்சம் செலவழிக்கப்பட்டதாக டெல்லி அரசு சொல்லி இருக்கிறது. 2017-ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட நிதியில் என்ன செலவு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அதில் குறிப்பிடவில்லை.
காற்று மாசில் தவிக்கும் டெல்லியில், சூழலைப் பாதுகாக்க இந்த நிதியை செலவிட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சியினரும், பொதுமக்களின் பிரதிநிதிகளும் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம் சாட்டி இருக்கின்றனர்.







