
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிரமன்வாடா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஒரு கரும்பு தோட்டத்திலிருந்து மூன்று சிறுத்தைப்புலிகளை நவம்பர் 8-ம் தேதி கண்டெடுத்தனர். பின்னர், இந்த சிறுத்தைப்புலி குட்டிகளை கிராமமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் அந்த மூன்று சிறுத்தைப்புலி குட்டிகளையும், அதன் அம்மாவுடன் சேர்த்து வைக்க நான்கு நாட்கள் முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதனால், வனத்துறை அதிகாரிகள் எஸ்.ஓ.எஸ் வன பாதுகாப்பு அமைப்பில் பணிபுரியும் கால்நடை மருத்துவர் அஜய் தேஷ்முக் உதவியை நாடினர்.
கரும்புத் தோட்டத்தில் காலடிச்சுவடு:
மருத்துவர் தேஷ்முக் அந்த கரும்பு தோட்டத்தைப் பார்வையிட்டார். அங்கு அந்த சிறுத்தைப்புலி குட்டிகளின் தாயின் காலடிச்சுவடுகளை கண்டார்.
காலடிச்சுவடுகள் உள்ள இடத்தில்தான் சிறுத்தைப்புலி குட்டிகளை ஈன்றெடுத்திருக்க வேண்டும் என்பது தேஷ்முக்கின் கணிப்பு. அதனால், அந்த மூன்று குட்டிகளையும் அந்த காலடிச்சுவடுகள் அருகே எடுத்துபோய் விட்டார். அவர் கணிப்பு பொய்க்கவில்லை.

தேஷ்முக் சொல்கிறார்,”மூன்று சிறுத்தைப்புலி குட்டிகளையும், கரும்பு தோட்டத்தில் நாங்கள் கண்ட அந்த காலடிச்சுவடு அருகே எடுத்துப் போய் நவம்பர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விட்டோம். சரியாக, அடுத்த அரை மணி நேரத்தில் தாய் சிறுத்தைப்புலி வந்து, குட்டிகளை தன்னுடன் எடுத்துச் சென்றது.”
சிறுத்தைப்புலியும், கரும்புத் தோட்டங்களும்:
மஹாராஷ்ட்ராவில், சிறுத்தைப்புலியின் விருப்பத்திற்குரிய இடமாக கரும்புத் தோட்டங்கள் இருக்கின்றன. அக்டோபர் முதல் ஜனவரி வரை அந்த மாநிலத்தில் கரும்பு அறுவடை நடைபெறும்.இந்த காலக்கட்டத்தில்தான் சிறுத்தைப்புலிகளும் குட்டிகளை ஈனுகின்றன. இதன் காரணமாக சிறுத்தைப்புலி குட்டிகள் தன் அம்மாவை பிரிய நேர்கிறது.
தேஷ்முக்கும் அவரது அமைப்பும் இதுவரை 40 சிறுத்தைப்புலி குட்டிகள் அதன் அம்மாக்களுடன் இணைய உதவி இருக்கிறார்கள்.
பெண் சிறுத்தைப்புலி, குட்டிகளை ஈன்றவுடன், இரை விலங்கை தேடி சென்றுவிடும். இதன் காரணமாக, பல சமயங்களில் தன் குட்டிகளை பிரிய நேருகின்றன. விவசாயிகள், கரும்பு அறுவடையின் போது அந்த குட்டிகளை கண்டெடுத்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.
இது போன்று பிரிந்த சிறுத்தைப்புலிகளை காப்பதற்காகவே ஒரு காப்பகத்தை எஸ்.ஒ.எஸ் அரசுசாரா அமைப்பு ஜுன்னாரில் நடத்துகிறது.
பிரிந்த குட்டிகளை அதன் தாயுடன் சேர்த்துவைக்க அஜய் தேஷ்முக் ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

தேஷ்முக் கூறுகிறார், “மனிதர்கள் இந்த பிரிந்த குட்டிகளுடன் பழகினால், மீண்டும் தாய் சிறுத்தைப்புலி தன் குட்டிகளை இணைத்துக் கொள்ளாது என்ற தவறான எண்ணம் மக்களிடையே இருக்கிறது. அவ்வாறெல்லாம் இல்லை.”
மேலும் அவர், “இது போன்ற பிரிந்த குட்டிகளை காப்பது கடினம். நாங்கள் பிரிந்த குட்டிகளை கண்டெடுத்தவுடன், அதன் உடல்நிலையை தீவிரமாக சோதிப்போம். அதற்கு ஏதேனும் நோய் இருக்கிறதா, காயங்கள் இருக்கிறதா என்று பார்ப்போம். அதன் உடல்நிலையை அதன் இதய துடிப்பை வைத்து சோதனை செய்வோம்” என்று விளக்கினார்.
பிரிந்த குட்டிகளை அதன் தாயுடன் சேர்ந்து வைப்பது குறித்து பேசிய தேஷ்முக், “தாயுடன் இணைப்பதற்கு முன், காப்பகங்களில் வாழும் அதன் குட்டிகளை காப்பது கடினமான ஒன்று. அதற்கு ஆட்டுப்பால்தான் கொடுப்போம். அதனால் இரண்டு வயது வரை திட உணவுகள் உண்ண முடியாது.”
சிறுத்தைப்புலி – மனித மோதல்:
“தன் குட்டிகளை பிரிந்துவிட்டால், பெண் சிறுத்தைப்புலிகள் கோபமாக, தீவிரமாக இருக்கும். இதன் காரணமாகம், அவை மனிதர்களை தாக்கலாம். பெண் சிறுத்தைகளை அதன் குட்டிகளுடன் இணைப்பதன் மூலம் இந்த தாக்குதல்களை தடுக்க முடியும்.” என்கிறார் வனவிலங்குகள் நல செயற்பாட்டாளர் சஞ்சய் பண்டாரி.

மருத்துவர் அஜய் தேஷ்முக், “நாசிக்கிலும், புனேவிலும் ஏராளமான கரும்பு தோட்டங்கள் இருக்கின்றன. இந்த தோட்டங்கள் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாக மாறிவிட்டன. பல முறை சிறுத்தைப்புலி – மனித மோதல்கள் இந்த கரும்புத் தோட்டங்களில் நடைப்பெற்றுள்ளன. ஆனால், இந்த சிறுத்தைப்புலிகளை அதன் குட்டிகளுடன் சேர்த்து வைக்கும் நிகழ்வுகள் மனிதர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. இனி சிறுத்தைப்புலிகள் தொந்தரவு இல்லாமல் வாழலாம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.” என்கிறார்.






