போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல்!!

35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாகவும் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழ இவரது பந்து வீச்சு முறை மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு இவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமலே போனது.

‘நடப்பு தேசிய டி20 தொடருக்குப் பிறகு அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என்னை பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சாதித்ததாகவே கருதுகிறேன். அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளேன்’ என ஊடகங்களுக்கு அஜ்மல் தெரிவித்தார்.

அஜ்மல் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக நீண்ட நாட்கள் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரை பிரபலப்படுத்தியது.

ஒரே ஆக்சனில் பந்தை ஆஃப் ஸ்பின், பிளிப்ப்ர், லெக் பிரேக் என்று வீசி பல முன்னணி துடுப்பாட்ட வீரர்களுக்கு துர்கனவாகத் திகழ்ந்தார். ஆனால் இந்தத் திறமையெல்லாம் அவர் பந்தை த்ரோ செய்ததால்தான் என்று விமர்சகர்கள் கூறிவந்தனர்.

புகார் எழ இவர் ஆக்சன் மாற்றியமைக்கப்பட்டது, அதன் பிறகான சர்வதேச போட்டிகளில் இவரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை, அனைவரும் இவரது பந்துகளை அச்சமின்றி பொளந்துகட்டத் தொடங்கினர். இதனால் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும் 64 டி20 சர்வதேச போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் அஜ்மல் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகள் தனக்கு வெறுப்பான காலக்கட்டம் என்று கூறும் அஜ்மல் ‘ஆக்சன் குறித்து என் மீது விதிக்கப்பட்ட தடை என்னை பெரிதும் காயப்படுத்தியது.

ஸ்டூவர்ட் பிராட் என் மீது விமர்சனம் வைத்தார். அதுவும் என்னை முடிவற்று காயப்படுத்தியது. ஆனால் நான் அனைவரையும் மன்னித்து விட்டேன்.பந்து வீச்சாளர்களின் ஆக்சனை மாற்றும் நடைமுறை எனக்கும் ஹபீஸுக்கும் மட்டும்தான் போலிருக்கிறது.

கேள்விக்குரிய ஆக்சனுடன் உள்ள மற்ற பந்து வீச்சாளர்கள் இன்னும் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். எதிர்காலத்தில் பயிற்சியாளராகத் திட்டமிட்டுள்ளேன்.’ எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் மேலும் தெரிவித்துள்ளார் .