உழவு இயந்திர காற்றாடியில் சிக்கிய வயோதிப மாது மரணம்!! புத்தூரில் சோகம்!!

யாழ். புத்தூரில் அடைமழையினால் நனைந்த வெங்காயப் பிடிகளை உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் உலர்த்திய போது அதனுள் சிக்குண்டு வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிரபல யாழ். புத்தூர் அறிவொளி வீதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையினால் விவசாய நிலத்தில் விளைந்து வீட்டில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த வெங்காயப் பிடிகள் நனைந்து காணப்பட்டன.

குறித்த வெங்காயப் பிடிகளை உலர்த்துவதற்காக அவரது உறவினர்கள் உழவு இயந்திரத்தினை இயக்கி, அதன் ஊடாகக் காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை உலர வைத்துள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த வயோதிபப் பெண்மணி உடைகளை உலர்த்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான உடைகளை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது .

அப்போது காற்றாடியிலிருந்து வெளிப்பட்ட கடும் காற்றுக் காரணமாக குறித்த பெண்மணி அணிந்திருந்த சேலை காற்றாடியின் சக்கரத்தில் சிக்குண்டுள்ளது.

இதன் போது, காற்றாடியின் பிளேட்டுக்குள் சிக்குண்ட அவர் உடலில் கடும் வெட்டுக்காயங்களுக்குள்ளானார்.

உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அம்புலன்ஸ் வாகனத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது இடைநடுவில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகின்றது.

அவரது சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.