விஷால் கட்டளையிடுவது நியாயமல்ல: திரையரங்க உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

திரையரங்கங்களில் விற்கப்படும் பொருட்களை குறிப்பிட்ட விலைக்குத்தான் விற்க வேண்டுமென நடிகர் விஷால் கட்டளையிடுவதாக திரையரங்க உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திரையரங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி எல்லாப் பொருட்களும் சரியான விலைக்கே விற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

_98315529_3ab600c5-799f-4774-bf7e-7a645c96ac27

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள், தமிழக அரசு படங்களுக்கு ஏற்ப திரைப்படக் கட்டணங்களை மாற்றிக்கொள்ள அனுமதித்திருப்பதால், பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்போவதாகத் தெரிவித்தனர்.

திரையரங்கத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சரியான விலைக்குத்தான் விற்கப்படுகிறதா என்பதைச் சோதிக்க, குழு அமைக்கப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருப்பது தங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்திருப்பதாக சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

திரையரங்கங்களில் ஏதாவது பிரச்சனையிருந்தால் இரு தரப்பு சங்கங்களின் மூலமாகப் பேசுவதைவிட்டுவிட்டு, கட்டளையிடுவதைப் போல நடிகர் விஷால் பேசுவது நியாயமல்ல என்றும் யாரும் யாருக்கும் முதலாளி அல்ல என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.

எல்லாத் தரப்பினரையும் ஒன்றாக அமரவைத்து பிரச்சனைகளைப் பேசுவதைவிட்டுவிட்டு, கமிட்டி அமைத்து சோதித்து, தவறு இருந்தால் புகார் செய்வேன் என்று விஷால் கூறியிருப்பது சரியல்ல என்றும் அவர்கள் மீது தங்களுக்கும் புகார் செய்ய விஷயங்கள் இருப்பதாகவும் தாங்கள் அதைச் சொல்லத் தயாரில்லையென்றும் தெரிவித்தார்.

திரையரங்கங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் அதிகம் இருப்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றிப் பேச முடியாது என்றும் இணைய தளங்களின் மூலம் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணங்களைக் குறைப்போம் என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.

திரையரங்குகளில் குடிநீர் பாட்டில்களை அதில் குறிப்பிட்ட விலைக்கே விற்பதாகவும் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்க அரசு அனுமதித்தால் அதையும் விற்போம் எனவும் உணவுப் பொருட்களைப் பொருத்தவரை, தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் வைக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் இதில் நியாயம் – அநியாயம் பார்க்க முடியாது என்றும் ராமநாதன் தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விஷால் கட்டளையிடுவது போல பேசுவது தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்த ராமநாதன், கடந்த 16 ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் உயராததால், வேறு விவகாரங்களில் சம்பாதிக்க வேண்டியிருந்ததாகவும் இனி அந்தத் தேவை இல்லை என்பதால் பொருட்கள் சரியான விலைக்கு விற்கப்படும் என்றும் கூறினார்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து பேசிய பின் வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து பேசிய பின் வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தமிழக திரையரங்குகளில் தற்போது அதிகபட்சமாக மல்டிப்ளெக்ஸ்களில் 150 ரூபாய் வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி, கேளிக்கை வரி உள்பட அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 205 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டை இணையம் மூலம் பதிவுசெய்யும்போது, ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 30 ரூபாய் சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சென்னையில் உள்ள மல்டிப்ளெக்ஸ்களில் வாகன நிறுத்தக் கட்டணங்கள், ஒரு மணி நேரத்திற்கு 30-40 ரூபாய் அளவுக்கு வசூலிக்கப்படுவதால், 150 – 180 ரூபாய் வரை செலுத்த வேண்டும். ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இவற்றை மால்களின் உரிமையாளர்களே வசூலிக்கிறார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கட்டண உயர்வுக்கான ஆணை இன்னும் அரசிடமிருந்து வராததால், புதிய கட்டணங்களை இதுவரை திரையரங்குகள் அறிவிக்கவில்லை.