ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன், இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காப்பதுபோல தமிழ் நாட்டில்கூட யாரும் தமிழ் மொழியை கட்டிக் காக்கவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.

NTLRG_20170112124512474293

கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்ற கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனம் என்று ஒன்று உள்ளது. அதற்கு வீர வரலாறு இருக்கின்றது என்பதை உலகறியச்செய்தவர் பிரபாகரன் மட்டுமே. அவர் இல்லையென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலையிருந்திருக்கும்.

கலைஞர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. கலைஞர்களை காலங்கள் பேசும். அந்த கலைஞர்களின் படைப்புகள் பேசும். 76 வயதினை கடந்துள்ள நிலையிலும் கலையொன்றே மனிதனைத் தளர்ச்சியில்லாமல் வைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன்.

கலைஞர்கள் மட்டுமே சாதாரண மனிதர்களில் மாறுபட்டவர்களாகவுள்ளனர். எல்லாவற்றையும் பார்த்து இரசிக்கக்கூடியவர்கள் தான் கலைஞர்கள்.

கலைஞர்களுக்கு வயதே கிடையாது. கலைகள் இவர்களைக் காப்பாற்றுகின்றது. அவர்களுடைய எண்ணங்களை இளமையாக வைத்திருக்கின்றது.

இங்கிருக்கின்ற மூத்த கலைஞர்களுக்கு எனது கைகளால் விருது வழங்குவதைவிட அவர்களது கரங்களால் நான் ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா மேலும் தெரிவித்தார்.