இழந்த கையை திரும்பப் பெற்றால், எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரேயாவிடம் தான் கேட்க வேண்டும். கல்லூரி மாணவியான ஸ்ரேயா புனே நகரில் இருந்து மங்களூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கினார். பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்ட ஸ்ரேயாவின் இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. கரங்கள் இல்லாமலேயே ஸ்ரேயா வாழவும் பழகி வந்தார்.

முன் கரங்கள் இணைக்கப்பட்ட பின் ஸ்ரேயா

இந்நிலையில், கொச்சியில் சாலை விபத்தில் சிக்கிய சச்சின் என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்தார். அதனால் சச்சினின் பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். சச்சினின் இரு கரங்களையும் ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கொச்சியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில் சிக்கல் நிறைந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருபது டாக்டர்கள், 16 மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கியக் குழு 13 மணி நேரம் அறுவைசிகிச்சை மேற்கொண்டு, சச்சினின் கரங்களை ஸ்ரேயாவுக்குப் பொருத்தினர். கரங்கள் பொருத்தப்பட்டப் பின், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரேயா காணப்பட்டார்.