விஜயதசமியில் ஏடு தொடக்கல்…

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் அது சிறந்த வெற்றியளிக்கும் என்பது  நம்பிக்கை.

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த விரும்புவது இயற்கையே. தன் குழந்தை பள்ளிக்கு செல்லும் அல்லது கல்வி கற்கத் துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவதும் இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஒவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.

இந்த மங்கலமான விஜயதசமியன்று தான் சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்க அது ப்ளே ஸ்கூலாக இருந்தாலும், செல்வதற்கு முன்பாக வரும் விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறித்துவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சர்சுகளில் வித்யாரம்பம் செய்வதை காண முடியும்.

அக்‌ஷரபியாசம் என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியை கோயில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோயில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம். அறிவை கொடுக்கும் குருவை சிறப்பிப்பதாகவும் இந்நிகழ்வு நடக்கிறது. குழந்தையை வீட்டில் அப்பா, தாத்தா அல்லது தாய் மாமாவின் மடியில் உட்கார வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும்.

குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, பொதுவாக ஆவன்னாவை எழுத வைப்பார். சிலர் ஓம் ஸ்ரீ கனபதைபே நமஹ என்றும் எழுதுவர். இதன் பிறகு ஒரு தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் அதே போல் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.

கோவிலில் செய்வதை விட வீட்டில் குடும்பத்தாரின் முன்னிலையில் செய்யும்போது குழந்தைகள் பயப்படாமல், அழாமல் இதில் கலந்து கொள்ளும் என்பதும் உண்மை.