சீனாவைச் சேர்ந்த 48 வயதான யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவு மிக நீளமானவை.
சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 சென்டிமீட்டர் வரை தான் நீளமாக இருக்கும்.
ஆனால், ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை.
உலகின் மிக நீளமான இமை முடிகளைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையையும் ஜியான்ஸியா நிலைநாட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் அவரின் பெயர் இடம்பெறவுள்ளது.
உலகம் முழுவதும் 500 பேர் இந்தப் பிரிவில் போட்டியிட்டுள்ளனர்.
தனது இந்த சாதனை குறித்து ஜியான்ஸியா தெரிவித்துள்ளதாவது,
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக இமை முடிகள் வளர்கின்றன என ஆச்சரியமாக உள்ளது. நான் கோடிக்கணக்கில் பணம்புரளும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தேன். 2013 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். இயற்கை மீது தீராத ஆர்வம் எனக்குண்டு. அதனால் மிகப்பெரிய தோட்டத்தை உருவாக்கினேன். அதில் 1,600 வகை ரோஜா செடிகளை வளர்த்து வந்தேன். அப்போதுதான் என் இமை முடிகள் மிக நீளமாக வளர ஆரம்பித்தன. அதற்கு முன்பு வரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். தோட்டத்துக்கும் என் இமை முடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கூட யோசித்திருக்கிறேன். நீளமாக வளர ஆரம்பித்தவுடன் அதை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் வாய் வரை வளர்ந்துவிட்டன. எல்லோரும் இது எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் ஒருநாளும் எந்தவித அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை. உலகிலேயே நீளமான இமை முடிகளுக்குச் சொந்தக்காரி என்பதில் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. தவறுதலாக முடிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நீளமான இமை முடிகள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் குறிப்பதாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை முகத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கிறேன்