வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிறை கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்த மிக முக்கியமான பல தகவல்கள் அரசாங்கத்தின் உயர்மட்டங்களுக்கு கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் கைதிகள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அதனை அடக்க இராணுவ அதிகாரிகள் நடந்து கொண்ட விதம், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவு, உத்தரவுகளை வழங்கிய உயர் அதிகாரிகள், பிரயோகிக்கப்பட்ட அதிகாரங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
பனாகொடை இராணுவ முகாமை சேர்ந்த 86 படையினர்,கஜபா படைப்பிரிவின் 67 படையினர், 7வது கொமாண்டோ படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட 5 படையினர் வழங்கிய வாக்குமூலங்கள் ஊடாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், வெலிகடை சிறையில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த 15 கைதிகளிடம் மேலும் பல தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த 15 கைதிகளில் அனுராதபுரம், பூசா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 கைதிகள் பல முக்கியமான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
சிறைக்குள் ஏற்பட்ட கலத்தை அடக்க படையினருடன் சிவில் உடையில் வந்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர், துஷார, கபில, நிர்மல, சுசந்த, டோல்யன் சந்தன உள்ளிட்ட கைதிகள் பெயர் கூறி வெளியில் அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு அமைய மேலும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதுடன் சாட்சியங்களுக்கு பெற்று திறனாக விசாரணைகளை நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நடந்த இந்த பயங்கரமான படுகொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை துரிதமாக நீதிமன்றத்தில் நிறுத்த விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






