வெலிக்கடை சிறைக்கைதிகள் கொலையின் சாட்சியாளர் தங்கியிருந்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் தங்கியிருந்த வீட்டின் மீது நேற்றிரவு (04) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

js

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதம செயலாளரான சுதேஷ் நந்திமால், அவரது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் வீட்டின் பிரதான நுழைவாயில் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, சம்பவம் இடம்பெற்ற போது கிடைத்த CCTV காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன்போது, பல சந்தர்ப்பங்களில் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 14ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சம்பவம் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டது.

இதேவேளை, கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த, சிவில் செயற்பாட்டாளர்கள் வெலிக்கடை சம்பவம் தொடர்பில் சட்டத்தை நிறைவேற்றுமாறு கோரினர்.

2015ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி சுதேஷ் நந்திமால் சில்வா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் சென்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.