தலைநிறைய சுருள் முடியோடு துறுதுறுன்னு வளைய வந்து கொண்டிருந்த என் செல்லத்தை, 19 வயதில் ‘விசாரணை’ என்று சொல்லி, கூட்டிட்டுப் போனாங்க. 26 வருஷமாச்சு. முதிர்ந்த இளைஞனா ‘பரோலில்’ வந்திருக்கான் என்று ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கப் பேசுகிறார், அற்புதம்மாள்.
ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார். ஜோலார்பேட்டை, கே.கே.தங்கவேல் தெருவில் உள்ள ‘பேரறிவாளன் இல்லம்’, இன்பவெள்ளத்தில் மிதக்கிறது.
ஊர் மக்கள், நண்பர்கள், உறவுகள் என அனைவரும் பேரறிவாளனைக் கட்டித்தழுவி, உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார்கள். மகன் வந்ததிலிருந்து அவரைக் கண்கொட்டாமல் அற்புதம்மாள் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்று வீட்டுக்குள் போய்விட்டுவரும் அனைவரும் சொன்னார்கள்.
நாம் தகவலைச் சொல்லியனுப்பி விட்டு, பேரறிவாளன் இல்லத்துக்கு வெளியே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் வெளியே வந்த அற்புதம்மாள், உங்களை வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போயி ஒரு காபித்தண்ணிகூட தர முடியலயே கண்ணு… என்று இயலாமையோடு சொன்னார்.
பேரறிவாளன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில், வீட்டுக்கு வெளியே அமர்ந்து நம்முடன் பேச ஆரம்பித்தார் அற்புதம்மாள்.
என் மகன் விடுதலையாகி விடுவான் என்கிற செய்தியைக் கேட்டு ஏமாந்த அனுபவம் நிறைய இருக்கு. அதனால் தான், ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு, பரோல் கிடைச்சு, அவன் வீட்டு வாசல்படியை மிதிக்கிற வரைக்கும் அந்தச் செய்தியை என்னால் உறுதிப்படுத்த முடியலை என்றார்.
வேலூர் சிறையிலிருந்து போலீஸ் வாகனத்துல வீட்டுக்கு வந்தப்போ, வழி தெரியாமல் பேரறிவாளன் குழம்பி விட்டாராமே? என்றதும், சட்டென்று முகம் மலர்ந்த அற்புதம்மாள், ஆமாப்பா…” என்று அந்தக் கதையை விவரிக்க ஆரம்பித்தார்.
வேலூர் சிறையிலிருந்து வீட்டுக்குச் செல்ல உத்தரவு கிடைச்சதும், ‘வீட்டுக்குப் போக நானே வழி சொல்றேன்’னு டிரைவருக்கு வழிகாட்டிய படியே அறிவு வந்திருக்கான். வாணியம்பாடியைத் தாண்டி ஜோலார்பேட்டைக்குப் பிரிகிற வழியைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியாம குழம்பியிருக்கான்.
இருபத்தாறு வருஷமாச்சே. எவ்வளவு பெரிய இடைவெளி. எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு. தேசிய நெடுஞ்சாலை அகலமாக ஆகிட்டது. அறிவை விசாரணைக்குக் கூட்டிட்டுப் போனப்போ, பொட்டல்காடாகக் கிடந்த இடமெல்லாம் இப்போ கட்டடங்களா ஆகிப்போச்சு. அதனால, அறிவுக்கு வழி தெரியலையாம்.
வீட்டுக்குள்ளே வந்ததும், ‘என்னம்மா நம்ம வீடு ரொம்ப சின்னதாயிடுச்சு’னு குழந்தை போல் கேட்டான். ‘இல்லடா கண்ணு! நீ வளந்துட்டே… ரோடெல்லாம் உயர்ந்துடுச்சு’ன்னு சொன்னேன் என்று கண்ணீரைத் துடைத்தவாறே பதில் சொன்னார் அற்புதம்மாள்.
வீட்டுக்கு வந்திருக்கும் மகனுக்கு என்ன சமைத்துக் கொடுத்தீர்கள்?
என்னை எங்கே சமைக்க விடுறாங்க. அறிவு வீட்டுக்கு வந்த செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துட்டு, அவனுடைய அக்காவும் தங்கையும் குடும்பத்தோட வந்துட்டாங்க. அவங்கதான் அறிவுக்கு ஆசை ஆசையா சமைச்சுப் போடுறாங்க.
என்னுடைய சமையலில் அவனுக்குப் பிடிச்சது சாம்பார்தான். அவன் ஜெயில்ல இருந்தப்போ ஒருமுறை ‘என்னப்பா சாப்பிட்டே?’னு கேட்டேன். ‘சாம்பார் சாதம்தான்ம்மா’ன்னு சாதாரணமா சொன்னான். ‘உனக்குப் பிடிச்ச சாப்பாடுதானேப்பா…’னு நான் கேட்டதும் முகத்தைத் திருப்பிக்கிட்டு, ‘இது நீ வெக்கிற சாம்பார் இல்லம்மா… வேற ஏதாவது பேசலாம்’னு சொல்லிட்டு வேதனை தாங்காம வெடிச்சு அழுதுட்டான்.
அதுக்கப்புறம் அவன்கிட்ட, ‘என்ன சாப்பிட்டப்பா’னு நான் கேட்டதேயில்லை. எந்தத் தாய்க்கும் நேரக்கூடாத கொடுமை” அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தார்.
ம்ம்ம்… எல்லோர் வீட்டையும் போல் நடக்கும். என் பெரிய மகள் கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அதனால அவளை ‘தோளி’ என்று பட்டப் பெயர் வெச்சுக் கூப்பிடுவான். என் சின்ன மகளுக்குப் பெரிய கண்கள். அதை வெச்சு அவன் கிண்டல் பண்ணுவான். அவங்க ரெண்டு பேரும் இவனை ‘பட்டா’னு கூப்பிடுவாங்க.
விடுமுறை நாள் வந்துட்டா, ஒண்ணா சேர்ந்து விளையாடுவாங்க. திடீர் திடீர்னு சண்டை வந்து அடிச்சுக்குவாங்க. அடுத்த நிமிஷமே அதை மறந்துட்டு அன்பா கொஞ்சி விளையாடுவாங்க. காலம் உருண்டோடிவிட்டது. அப்போ, சகோதரிகளோடு விளையாடினான். இப்போ, சகோதரிகளோட பிள்ளைகளுடன் செல்லச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.
நேத்து ‘விநாயகர் சதுர்த்தி’. பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் அறிவுக்காகக் கொழுக்கட்டை செஞ்சுட்டு வந்து கொடுத்தாங்க. அந்தக் கொழுக்கட்டைகளை என் பேத்திகள் எடுத்துச் சாப்பிட்டு காலி பண்ணிட்டாங்க. இப்போ, கொழுக்கட்டைக்காகத்தான் அறிவும் அவனுடைய மருமகள்களும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.
சிறு வயதுப் பேரறிவாளனை, எந்த விஷயத்துக்காக நீங்கள் கண்டித்திருக்கிறீர்கள்?
நான் கண்டிக்கிற அளவுக்கு தவறேதும் அவன் செய்ததில்லை. அவனுடைய அப்பா, பள்ளிக்கூட வாத்தியார். குடும்பத்திலுள்ள அனைவருமே பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவங்க. அதனால, சிறுவயதிலேயே அவனுக்குத் தெளிவான மனநிலையும் உறுதியும் இருந்துச்சு.
26 வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகும், அதே தெளிவும் உறுதியும் அவன்கிட்ட இருப்பதைச் சொல்லித்தான் எல்லோரும் ஆச்சர்யப்படுறாங்க.பள்ளியில் படிக்கிறப்போ, ஏதோ ஒரு விஷயத்துக்காக அவனைக் கண்டிக்க நான் கூப்பிட்டேன்.
வராமல் ஓடினான். கோபத்தில், நான் கையில் வெச்சிருந்த ஜல்லிக்கரண்டியை வீசியெறிஞ்சிட்டேன். அது அவனுடைய கால்களுக்கிடையே மாட்டிக் கீழே விழுந்துட்டான். காலில் அடிபட்டிருச்சு. அப்போதிருந்து, ஜல்லிக்கரண்டியை ‘ஆயுதம்’னு விளையாட்டா சொல்வான்.
ஒரு தடவை, சிறையில பார்க்கப் போனப்போ, ‘ஆயுதம் எல்லாம் பத்திரமாக இருக்காம்மா’னு விளையாட்டா கேட்டான். அங்கே நின்றிருந்த போலீஸ்காரர் பதற்றத்துடன் விசாரிக்க ஆரம்பிச்சுட்டார். ‘ஒண்ணுமில்லை. அது எனக்கும் அம்மாவுக்குமான விஷயம்’னு சொல்லி ஜல்லிக்கரண்டிக் கதையைச் சொன்னான்.
அந்த ஜல்லிக்கரண்டி இப்போதும் இருக்கிறதா?
அதுமட்டுமல்ல… அவன் ஓட்டிப் பழகிய சைக்கிள், வாசித்துப் பழகிய கிடார் எல்லாமும் பத்திரமாக இருக்கு. வீட்டுக்குள் வந்து அப்பாவின் உடல்நலத்தை விசாரித்தவன், அவனோட விளையாட்டுப் பொருள்கள் எல்லாம் பத்திரமா இருக்கான்னு போய்ப் பார்த்தான். எல்லோரையும் போல, என் மகனோட வாழ்க்கையும் இருந்திருந்தா, இந்நேரம் அவனோட பிள்ளைங்க இங்கே விளையாடிட்டிருப்பாங்க.
அப்பா குயில்தாசன் – அம்மா அற்புதம்மாள் பற்றி பேரறிவாளன் என்ன சொன்னார்?
வயசான காலத்துல நோய் நொடின்னு நாங்க சிரமப்படுறதைப் பார்த்து அவனுக்கு மனசுக்குள்ள வருத்தம். ‘நாம ஒரே பிள்ளையாயிருந்தும் பெத்தவங்களைப் பக்கத்துல இருந்து கவனிக்க முடியலியே… இந்த வயசுலேயும் நமக்காக அவங்களைச் சிரமப்படுத்துறோமே’ங்குற ஏக்கம் அவனுக்கு உண்டு.
அதை மத்தவங்ககிட்டே சொல்வான். அவன் சொன்ன விஷயங்களையெல்லாம் நான் தெரிஞ்சுக் கிட்டாலும், அந்த வலியையெல்லாம் ஆழ்மனசுல புதைச்சுட்டு, எதுவும் தெரியாத மாதிரியேதான் அவன்கிட்ட பேசுவேன்.
‘நாம யார்கிட்டயும் உதவின்னு போக வேண்டாம்மா… நாம ஒருத்தர்கிட்டே உதவின்னு போயிட்டாலே அவங்க நம்மை அடிமைப்படுத்தத்தான் நினைப்பாங்க’ன்னு எனக்கு அறிவுரை சொல்வான்.
பேரறிவாளன் திருமணத்துக்குப் பெண் பார்ப்பதாகச் செய்திகள் வந்தனவே?
பிள்ளையைப் பெற்ற எனக்குள்ள இருக்குற ஆசையை நான் வெளிப்படுத்துறேன். ஆனா அவனோ, ‘என் வாழ்க்கை உள்ளேயா, வெளியேவா என உறுதியாகாத இந்த நேரத்துல கல்யாணமெல்லாம் வேண்டாம்மா’ன்னு விரக்தியா சொல்றான்.
ஆனா, என்னால் அப்படிக் கடந்து போக முடியல. எங்கள் குடும்பத்தில் அனைவருமே பெரியாரிஸ்ட்கள்தான். பிள்ளைகளையும் ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல்தான் என் கணவர் வளர்த்தார். சமத்துவம், சுயமரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்று முற்போக்குச் சிந்தனைப் பாதையிலேயே பயணிச்சிருக்கேன்.
என் மகன் உள்ளிட்டவர்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய நல்லவர்களின் துணையோடு நாங்கள் கடந்துவந்த பாதையும் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்திருக்கு. ‘பேரறிவாளன் நல்ல பையன்’ன்னு எங்க ஊர்க்காரங்களும், உறவுக்காரங்களும், நண்பர்களும்தான் சொல்லிட்டு இருந்தாங்க.
ஆனா, தமிழகச் சட்டமன்றத்தில், மூவர் விடுதலைக்காகத் தீர்மானம் இயற்றித் தந்து, இவர்கள் ‘குற்றமற்றவர்கள்’ என உலகுக்கே உரக்கச் சொல்லிச்சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் நிச்சயம் நன்றி சொல்லணும்.
அதுக்கப்புறம்தான், உலகமே இவங்க பக்கம் இருந்த நியாயத்தை உணர ஆரம்பிச்சது. இப்போகூட, தமிழக அரசியல் சூழலில், பல சிக்கல்களுக்கிடையே என் மகன் பரோலுக்காக நான் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டப்போ, நேரம் ஒதுக்கியதோடு உதவுவதாகவும் முதல்வர் உறுதியளிச்சார்.
சொன்னதுபோலவே இப்போது என் மகனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுத்து வீட்டுக்கும் அனுப்பி வெச்சிருக்காங்க. இந்த மகிழ்ச்சி முப்பது நாள்களுக்குள் வடிந்து விடாமல், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருமே நிரந்தர விடுதலை பெற்று வீடு திரும்பணும்.
எங்களின் இந்த மகிழ்ச்சியை நிரந்தரமாக்க நல்ல உள்ளம் படைத்தவர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.
இத்தனை ஆண்டு காலமாக தனியாகக் கழிவறை வசதி கூட இல்லாமல், உணவு, தூக்கம், காலைக்கடன்… என அனைத்துமே ஒரேயொரு சின்ன அறைக்குள்தான் என்று வாழ்க்கையைக் கழித்து விட்டவன் அவன்.
எல்லோரையும் போல், என் பிள்ளையும் குடும்பம், குழந்தைகள் என எங்களுடன் வந்து வாழ வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு எந்த ஆசையும் எனக்கு இல்லை…” கண்ணீர் மல்க நம் கரங்களைப் பற்றி விடைகொடுத்தார் அற்புதம்மாள்.